தஞ்சாவூர்:தமிழ்நாடு முழுவதும் 8 மாவட்டங்களில் ரூ.105.08 கோடி மதிப்பீட்டில் 106 நவீன நெல் சேமிப்பு நிலையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்.11) காணொலி காட்சி மூலம் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து திறந்து வைத்தார். இதற்காக அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் இந்நிகழ்ச்சியை விவசாயிகள், பொதுமக்கள் என அனைவரும் எளிதில் காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில், தஞ்சாவூரில் நெல்மணிகளை பாதுகாக்க மேற்கூரையுடன் அமைக்கப்பட்ட கான்கிரீட் கொள்முதல் நிலையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கு நிகழ்ச்சியை காண்பதற்கு போதிய ஏற்பாடுகள் செய்யததோடு, அவற்றை காண விவசாயிகளுக்கும் அழைப்பு விடுக்கவும் தவறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திட்டமிடப்படாத இந்த அரசு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், எம்எல்ஏக்கள் சந்திரசேகரன், நீலமேகம், மேயர் ராமநாதன் மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழகம் முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி ஆகியோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பயிரிடும் நெல்மணிகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோன்களில் கொள்முதல் செய்து வைக்கப்படுகிறது. பெரும்பாலான இடங்களில் கூரையுடன் கூடிய கொள்முதல் மையம் இல்லாததால் விவசாயிகளும் கொள்முதல் செய்த நெல்லை பாதுகாக்க திறந்த வெளியில் அடுக்கி வைக்கின்றனர்.
மேலும் மலை, வெயிலில் மூட்டைகள் சீரழிந்து வருவதை தவிர்க்க திறந்த வெளி சேமிப்பு மையங்களில் கட்டாயம் கான்கிரீட் தளத்துடன் கூடிய மேற்கூரை வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து, தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லை பாதுகாக்க கான்கிரீட் தளத்துடன் கூடிய மேற்கூரை கட்ட ரூ.35.205 கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.