தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவின்பேரில் மாநகராட்சி, நகராட்சி அலுவலர்கள் டவுன்பகுதியில் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், தஞ்சை நகர் நல அலுவலர் நமச்சிவாயம், தலைமையில் 10 பேர் கொண்ட குழு தஞ்சை கீழவாசல் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள சங்கர் என்பவருக்கு சொந்தமான கடையில் நான்கு துப்புரவு ஆய்வாளர்கள், பெண் மேற்பார்வையாளர்கள் உட்பட 6 பேர் கடைக்குள் சென்று பிளாஸ்டிக் பொருள் உள்ளதா என சோதனை மேற்கொண்டனர். அப்போது கடையிலிருந்த இரண்டு ஊழியர்கள், திடீரென வெளியே வந்து அலுவலர்களை உள்ளே வைத்து கடையின் ஷட்டரை இழுத்து மூடினர். அதேபோல் கடைக்கு செல்லும் மின் இணைப்பையும் துண்டித்துவிட்டு ஓடினர். இதனால் அங்கே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.