தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் புறவழிச் சாலையில் அமைந்துள்ள காய்கறி மார்க்கெட், அன்னை பொறியியல் கல்லூரியில் அமைந்துள்ள கரோனா நோய்த்தடுப்பு மையத்தின் உணவு வசதிகள், சிகிச்சை வசதிகள், மருத்துவ முறைகள் ஆகியவை குறித்து மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்த ராவ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்த ராவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தஞ்சாவூர் மாவட்டத்தில் 76 கட்டுப்பாட்டு பகுதிகள் தற்போது உள்ளன. இப்பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இல்லாத வகையில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, குடியிருப்பு பகுதிகளில் உள்ளவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்கள் தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்படுகின்றன.
மாவட்டத்தில் கரோனா தொற்று சற்று அதிகரித்துவருவதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்பேரில் கூடுதலாக காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக, கடந்த 15 நாள்களில் 1,222 காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதுவரை 71 ஆயிரத்து 304 பேர் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் மூலம் பயன் பெற்றுள்ளனர்.