தஞ்சாவூர்: காவிரி டெல்டா பாசனப் பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்ட விவசாயத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை பகிர்ந்து வழங்கும் அணையாக தஞ்சை மாவட்டம் கல்லணை விளங்குகிறது.
இந்த நிலையில் குறுவை சாகுபடி பணிகளுக்காக மேட்டூர் அணை வருகிற ஜூன் 12ஆம் தேதி முதலமைச்சர் மு.கஸ்டாலினால் திறந்து வைக்கப்பட உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் இரண்டு நாட்களுக்குப் பிறகு, தஞ்சை மாவட்டம் கல்லணையை வந்தடையும்.
அவ்வாறு கல்லணையை வந்து அடைந்ததும் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளுக்கு தண்ணீரை அமைச்சர்கள் திறந்து வைப்பார்கள். இந்த தண்ணீர் நீரின் அளவிற்கு ஏற்ப பகிர்ந்து அளிக்கப்படும். மேட்டூர் அணை திறப்பால் 12 மாவட்டங்கள் பாசன வசதி பெறும். இதனிடையே கல்லணையில் உள்ள கட்டுமானங்கள், மதகுகள், இரும்பு ஷட்டர்கள், நீர் வெளியேறும் பகுதியில் தரைத்தளம் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு சீரமைப்பு பணிகள் 122.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
முக்கியமாக, கல்லணை காவிரி ஆற்றின் உட்பகுதியில் தரைத்தளம் அமைத்தல், காவிரி ஆற்றில் பொதுமக்கள் இறங்கி குளிப்பதற்கான தொட்டி போன்ற அமைப்பு, கொள்ளிடம் ஆற்றில் இரும்பு ஷட்டர்கள் புதுப்பிக்கும் பணி, ஷட்டர்களை ஏற்றி இறக்க புதிய மின் மோட்டார் பொருத்தும் பணி, தோகூர் பேருந்து நிலையம் அருகே உள்ள வடிகால் பாலம் சீரமைப்பு பணி ஆகிய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.