தஞ்சாவூர் பெரியகோயிலில் மகா நந்திகேசுவரருக்கு ஒவ்வொரு பிரதோஷ நாளின்போதும் சிறப்பு வழிபாடு, அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். ஆனால், கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 18ஆம் தேதி பெரிய கோயில் மூடப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதன் பின்னர் பக்தர்கள் பங்கேற்பு இல்லாமல், பிரதோஷ வழிபாடு நடைபெற்று வந்தது.
கரோனா பொது முடக்கத்தில் சில தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்ததைத் தொடர்ந்து, பெரிய கோயிலில் பக்தர்கள் வழிபட கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து, ஆறு மாதங்களுக்கு பிறகு கடந்த 15 ஆம் தேதி நடைபெற்ற முதல் பிரதோஷ வழிபாட்டில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து இன்று (செப்.29) இரண்டாவது பிரதோஷத்தை முன்னிட்டு வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில், தகுந்த இடைவெளியுடன் அமர்ந்து பக்தர்கள் பிரதோஷத்தைக் கண்டுகளித்தனர். மேலும், குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். கோயிலுக்குள் வந்த பக்தர்களுக்கு வெப்பமானி மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. முகக்கவசம் அணிந்தவர்களை மட்டுமே உள்ளே அனுமதித்தனர்.