உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றுவருகிறது. குடமுழுக்கு நிகழ்ச்சிக்கான யாகசாலை பூஜைகள் பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்கி, நேற்றுடன் நிறைவடைந்தன. இன்று அதிகாலை 4:30 மணியளவில் குடமுழுக்கிற்கான பூஜைகள் தொடங்கி நடைபெற்றுவந்த நிலையில், குடமுழுக்கு நிகழ்ச்சி காலை 9:30 மணியளவில் நடைபெற்றது.
காவிரி, கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளிலிருந்து எடுத்துவரப்பட்டு சிறப்புப் பூஜைக்கு உட்படுத்தப்பட்ட புனித நீர் பெரிய கோயில் கலசங்களில் ஊற்றப்பட்டது. ராஜ கோபுரம், கேரளாந்தகன் கோபுரம், மூல கோபுரம் உள்ளிட்ட அனைத்துக் கோபுர கலசங்கள் மீதும் சிவாச்சாரியர்கள், ஓதுவார்கள் திருமுறை பாட பூஜிக்கப்பட்ட புனித நீரானது கலசங்களில் ஊற்றப்பட்டது.
தொடர்ந்து தமிழ், சமஸ்கிருத மொழிகளில் வேதங்கள் முழங்க தீபாராதனை நடைபெற்றது. மேலும், திருமுறை, திருவாசகம் ஆகியவற்றை ஓதுவார்கள் இசைத்தனர்.
23 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமரிசையாக நடக்கும் குடமுழுக்கு விழா என்பதால் தமிழ்நாடு மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களிலிருந்தும் நாடுகளிலிலிருந்தும் பக்தர்கள் வருகை தந்துள்ளனர். இதனையொட்டி, தஞ்சையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.