வண்ணச் சீருடையில் ஜொலிக்கும் அரசு பள்ளி மாணவர்கள்! தஞ்சாவூர்: அன்னப்பன்பேட்டையில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது, இப்பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை சுமார் 181 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியராக வெங்கடாசலபதி மற்றும் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், தங்களது பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு மூலம், பள்ளியின் கல்வித்தரம், அடிப்படை கட்டமைப்பு ஆகியவற்றை தலைமை ஆசிரியர் உயர்த்தி வருகிறார்.
வண்ணச் சீருடை:பள்ளியின் மேலாண்மை குழு கூட்டத்தின் மூலம், பள்ளி மாணவர்களின் சீருடை குறித்து மாணவர்களின் ஏக்கத்தை புரிந்து கொண்ட இப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வண்ண சீருடைகளை வழங்க முடிவு செய்தனர்.
அதன்படி மாணவர்களின் பெற்றோர்களிடம் இருந்து சிறு தொகையைப் பெற்றுக் கொண்டு, பள்ளி மேலாண்மை குழு மற்றும் ஆசிரியர்கள் நிதி உதவியுடன் வண்ணச் சீருடை வாங்கி மாணவர்களுக்கு வழங்கியுள்ளனர்.
இதையும் படிங்க:மகளிர் உரிமைத் தொகைத் திட்டப்பதிவு... வந்தது இல்லம்தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு பணி!
மாணவர்களுக்கு பச்சை மற்றும் கருநீலமும், மாணவிகளுக்கு மஞ்சள் மற்றும் கருநீல சீருடைகள் வழங்கப்பட்டன. இந்த சீருடைகளை மாணவர்கள் வாரத்தில் ஒரு நாள் அணிந்து வருகின்றனர். அவ்வாறு வரும்போது தனியார் பள்ளிக்கு இணையாக, அரசுப் பள்ளி மாணவர்களும் வண்ண உடை அணிந்து வருவது பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. ஜொலிக்கும் வண்ண சீருடையில், மிடுக்கான நடையில் மாணவர்களும் மிகுந்த உற்சாகத்துடன் வந்து வகுப்பறையில் பாடம் படிக்கின்றனர்.
நேர்மை பெட்டி:மேலும் பள்ளியில் நேர்மையை வெளிக்காட்டும் வகையில் ஆளில்லாத சிறுகடை அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஊட்டச்சத்து உள்ள கடலை உருண்டை, எள் உருண்டை ஆகிய தின்பண்டங்கள் வாங்கி வைத்துள்ளனர்.
அதன் அருகே உண்டியலும் வைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களுக்கு தேவைப்படும் தின்பண்டங்களை அதற்குரிய தொகையை உண்டியலில் போட்டு எடுத்துக் கொள்கின்றனர். இதன் மூலம் மாணவர்களுக்கு நேர்மை, ஒழுக்கம் உள்ளிட்டவை தானாகவே உருவாவதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
சிறுவயதில் இருந்து சேமிப்பு:மாணவர்கள் வங்கி என்று ஏற்படுத்தி அதில் மாணவர்கள் தங்களிடம் உள்ள சிறு தொகையை தினமும் செலுத்தி வருகின்றனர். அதை ஆசிரியர் குறித்து வைத்துக் கொண்டு மாதக் கடைசியில் மாணவர்களின் பெயரில் அஞ்சலக சேமிப்பு கணக்கில் செலுத்தி வருகின்றனர்.
இதனால் மாணவர்களுக்கு சேமிக்கும் பழக்கம் ஏற்படுகிறது. இது போன்ற அரசுப் பள்ளியின் செயல்பாடுகள் அந்தப் பகுதி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே நட்புறவு ஏற்படுகிறது.
தன்னம்பிக்கை ஊட்டும் அரசு பள்ளி ஆசிரியர்களின் செயல் இது குறித்து அன்னப்பன்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வெங்கடாசலபதி கூறும்போது, “தங்களது பள்ளி தன்னிறைவு பெற்ற கற்றல் சூழல் பெற வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறது. இதனை அடுத்து மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் வண்ணச் சீருடை வழங்கப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சியுடன் மாணவர்கள் பள்ளிக்கு வருகிறார்கள். மாணவர்களின் பொருளாதார நிலையை உயர்த்தும் வகையில் மாணவர்கள் வங்கி என்ற அமைப்பு செயல்படுத்தி வருகிறோம்” எனத் தெரிவித்தார்.
பின்னர், பள்ளி மாணவி ஹர்ஷினி பேசுகையில், தங்களது சேமிப்பு பணம் மூலம் விரும்பிய பொருட்களை வாங்க முடிகிறது எனவும், இதனால் மேலும் சேமித்து தனக்கான செலவுகளை தாங்களே பார்த்து கொள்கிறோம் எனவும் தெரிவித்தார். மேலும், ஆளில்லா கடை மூலம் தங்களது நேர்மையை வெளிக்காட்ட வாய்ப்பு ஏற்படுகிறது. இந்த மாதிரியான செயல்களால் தங்களுக்கு ஆர்வம் அதிகரித்து உள்ளதாகவும் தெரிவித்தார்.
பள்ளி வளர்ச்சிக்காக பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மேலாண்மை குழு ஆகியோரின் கூட்டு முயற்சியால் இது போன்ற நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சுதந்திர இந்தியாவில் சாலையில் நடக்க தடையா? - நெல்லையில் சமூக ஆர்வலருக்கு விதித்த தடையால் பரபரப்பு!