தமிழ்நாடு அரசு, இருசக்கர வாகனம் ஓட்டுபவரும், பின்னால் அமர்ந்து வரும் நபரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தி வருகிறது. மேலும் இது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் காவல் துறையினரால் நடத்தப்பட்டும் வருகிறது. அதன் அடிப்படையில் தஞ்சையில் மாவட்டம் முழுவதும் பள்ளி கல்லூரி வளாகம், பேருந்து நிலையங்கள், பைபாஸ் சாலைகளில் போக்குவரத்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து காவல்துறையினர் நடத்திய தீவிர வாகன சோதனையில், அரவிந்த் (36) என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் மதுபோதையில் வாகனத்தில் வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது வாகனத்தை பறிமுதல் செய்த காவலர்கள், அவர் மீது வழக்குப் பதிவுசெய்து தஞ்சை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவ்வழக்கை விசாரணை செய்த நீதிபதி மதுபோதையில் வாகனம் ஓட்டிவந்த அரவிந்திற்கு போக்குவரத்து காவல்துறையினரை ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கும்படி அதிரடியாக உத்தரவிட்டார். இது அந்த மாவட்ட வாகன ஓட்டிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.