தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஞ்சாவூர் அருகே சுவாமிமலை முருகன் கோவிலில் தைப்பூச விழா

தஞ்சாவூர் அருகே கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை முருகன் கோவிலில் தைப்பூச விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தஞ்சாவூர் அருகே சுவாமிமலை முருகன் கோவிலில் தைப்பூச விழா
தஞ்சாவூர் அருகே சுவாமிமலை முருகன் கோவிலில் தைப்பூச விழா

By

Published : Jan 26, 2023, 10:56 PM IST

தஞ்சாவூர் அருகே சுவாமிமலை முருகன் கோவிலில் தைப்பூச விழா

தஞ்சாவூர்:தமிழ்க்கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக அமையப்பெற்றது, கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில். இது பிரபவ முதல் அட்சய முடியவுள்ள 60 தமிழ் வருட தேவதைகள் 60 படிக்கட்டுகளாக அமையப்பெற்ற கட்டுமலைக்கோயிலாகும்.

தந்தை சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திர பொருளை குருவாக இருந்து உபதேசித்த பெருமை பெற்றது இத்தலம். எனவே, இத்தலத்தில் முருகப்பெருமான், சிவகுருநாதன் என்றும்; சுவாமிநாதன் என்றும் போற்றப்படுகிறார். நக்கீரரால் திருமுருகாற்றுப்படையிலும், அருணகிரிநாதரால் திருப்புகழிலும் பாடல் பெற்ற தலமும் அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் பாத தரிசனம் அருளிய சிறப்புடைய தலம் என்ற பெயரும் பெற்றது இந்த சுவாமிமலை திருத்தலம்.

இத்தகைய சிறப்பு பெற்ற நான்காம் படைவீடான சுவாமிமலையில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்திருவிழா சிறப்பாக பத்து நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல, இவ்வாண்டும் இவ்விழா, இன்று உற்சவர் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி விசேஷ மலர் அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருள, தங்க கொடிமரத்திற்கு திரவியப்பொடி, மஞ்சள், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஜெபிக்க, நாதஸ்வர மேள தாள மங்கள வாத்தியங்கள் இசைக்க, வேலுடன் யானை உருவப்படம் பொறிக்கப்பட்ட திருக்கொடி தங்க கொடிமரத்தில் ஏற்றப்பட்டு மகாதீபாராதனை செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், திருக்கோயில் துணை ஆணையர் உமாதேவி, கண்காணிப்பாளர் சுதா, கோயில் சிவாச்சாரியார்கள், பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

தைப்பூசத் திருவிழாவினையொட்டி நாள்தோறும் காலையும், மாலையும் படி சட்டத்தில் சுவாமி திருவீதியுலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 10ம் நாளான பிப்ரவரி 04ம் தேதி சனிக்கிழமை தைப்பூசத்தன்று காலை வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி திருவீதியுலாவும், தொடர்ந்து காவிரியாற்றில் தீர்த்தவாரி வைபவம் நடைபெற்று நிறைவாக பிப்ரவரி 05ம் தேதி ஞாயிற்றுக்கிழமை யதாஸ்தானம் சேர்தலுடன் இவ்வாண்டிற்காண தைப்பூசத்திருவிழா இனிதே நிறைவு பெறுகிறது.

இதையும் படிங்க:Republic day: டெல்லியில் ஒளவையார், வேலுநாச்சியாருடன் கம்பீரமாக வலம் வந்த தமிழ்நாடு ஊர்தி!

ABOUT THE AUTHOR

...view details