தை மாதத்தில் வரும் பௌர்ணமியும், பூச நட்சத்திரமும் ஒன்றாக வரும் நாளில் முருகன் அவதரித்ததாகக் கருதி அந்நாளை தைப்பூசத் திருநாளாக தமிழர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த நாளில் பக்தர்கள் விரதமிருந்து முருகனை வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாதர் திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தைப்பூசத் திருவிழா கடந்த ஜனவரி 29ஆம் தேதி மாலை விநாயக வழிபாடுகளுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 30ஆம் தேதி காலையில் கொடியேற்றமும் அன்று இரவு படிசக்கரத்தில் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதனையொட்டி கடந்த எட்டு நாட்களாக நடந்துவரும் விழாவில் பல்வேறு வாகனங்களில் சாமிநாதர் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் மிகமுக்கிய நாளான தைப்பூசமான இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனத்தைத் தொடர்ந்து சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது.
தைப்பூசம் : சாமிமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு!
அதனைத் தொடர்ந்து வைரவேல், வைர கிரீடம், சகஸ்ர மாலை, தங்க கவசம் உள்ளிட்ட ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளிய முருகனை, காவடி, அலகு குத்தி, பாதயாத்திரையாக வருகை தந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருக்கோயில் நிர்வாகம் செய்துள்ளது.
தைப்பூசத் திருவிழாவையொட்டி, தமிழ்நாட்டில் உள்ள ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட பல முருகன் கோயில்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் தைப்பூசத் திருவிழா தமிழர்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. மலேசியாவில் பத்துமலை முருகன் கோயிலில் லட்சக்கணக்கான மக்கள் இன்று தரிசனம் செய்து வருகின்றனர். பினாங்கு, ஈப்போ ஆகிய இடங்களிலும், சிங்கப்பூர், மொரிஷியஸ், இலங்கை ஆகிய நாடுகளிலும் தைப்பூசம் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
இதையும் படிங்க: எனது துறையில் லஞ்சம் இல்லை - அமைச்சர் பெருமிதம்