சுவாமிமலை முருகன் கோயில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது தஞ்சாவூர்: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயிலில், உற்சவர் சுப்பிரமணியசுவாமி வள்ளி தேசேனா சகிதமாக கொடிமரம் அருகே எழுந்தருள, தங்க கொடிமரத்தில் வேலுடன் கூடிய யானைச் சின்னம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்ற, தைப்பூசத்திருவிழா தொடங்கியது.
இதில் திருக்கோயில் துணை ஆணையர் உமாதேவி, கோயில் கண்காணிப்பாளர், சிவாச்சாரியார்கள், திருக்கோயில் பணியாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். முருகப்பெருமானின் நான்காம் படை வீடான இக்கோயில், பிரபவ முதல் அட்சய முடியவுள்ள 60 தமிழ் வருட தேவதைகள், 60 படிக்கட்டுகளாக அமையப் பெற்ற கட்டுமலைக் கோயிலாகும்.
தந்தை சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திரப் பொருளை குருவாக இருந்து உபதேசித்த பெருமை பெற்றது இத்தலம். எனவே இத்தலத்தில் முருகப்பெருமான், சிவகுருநாதன் என்றும் சுவாமிநாதன் என்றும் போற்றப்படுகிறார். நக்கீரரால் திருமுருகாற்றுப்படையிலும், அருணகிரிநாதரால் திருப்புகழிலும் பாடல் பெற்ற தலமும், அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் பாத தரிசனம் அருளிய சிறப்புடைய தலம் என்ற பெயரும் பெற்றது, இந்த சுவாமிமலை திருத்தலம்.
இத்தகைய சிறப்பு பெற்ற நான்காம் படைவீடான சுவாமிமலையில், ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத் திருவிழா சிறப்பாக பத்து நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டும் இவ்விழா, இன்று (ஜன.16) உற்சவர் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி அஸ்திரதேவர், விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகியோருடன் எழுந்தருள, விசேஷ மலர் அலங்காரத்தில் கொடி மரம் அருகே எழுந்தருள, தங்கக் கொடி மரத்திற்கு திரவியப்பொடி, மஞ்சள், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்து, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, நாதஸ்வர மேள தாள மங்கள வாத்தியங்கள் இசைக்க, வேலுடன் யானை உருவப்படம் பொறிக்கப்பட்ட திருக்கொடி தங்கக் கொடிமரத்தில் ஏற்றப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திருக்கோயில் துணை ஆணையர் உமாதேவி, கண்காணிப்பாளர் கோயில் சிவாச்சாரியார்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தைப்பூசத் திருவிழாவினையொட்டி, நாள்தோறும் காலையும், மாலையும் படிச்சட்டத்தில் சுவாமி திருவீதியுலா நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 10ஆம் நாளான ஜனவரி 25ஆம் தேதி வியாழக்கிழமை தைப்பூசத்தன்று, காலை வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி திருவீதியுலாவும், தொடர்ந்து காவிரியாற்றில் தீர்த்தவாரி வைபவம் நடைபெற்று, நிறைவாக 11ஆம் நாளான ஜனவரி 26ஆம் தேதி வெள்ளிக்கிழமை யதாஸ்தானம் சேர்தலுடன் இவ்வாண்டிற்காண தைப்பூசத் திருவிழா நிறைவு பெறுகிறது.
இதையும் படிங்க:திருவள்ளுவரின் தேரை ஓட்டும் ஔவையார்.. மயிலாடுதுறையில் சிறப்பாக நடைபெற்ற ஊர்வலம்!