கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 1வது வார்டில் மறுவாக்கு எண்ணும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைப்பு கும்பகோணம்ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற கும்பகோணம் ஒன்றியக்குழு உறுப்பினர்த் தேர்தலில் மானம்பாடி, சேங்கனூர், மகாராஜபுரம் ஊராட்சிகளை உள்ளடக்கிய 1வது வார்டில் அதிமுக சார்பில் கண்ணகி கண்ணன் என்பவர் போட்டியிட்டு 1,865 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவருடன் மொத்தம் ஐந்து நபர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.
இதில், செல்லாத வாக்குகள் மட்டும் 278 ஆகும். இவருக்கு எதிராக சுயேட்சையாக போட்டியிட்ட மகாராணி என்பவர் 1,817 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார். இந்நிலையில் மகாராணி என்பவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக உறுப்பினர் கண்ணகி கண்ணன் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி தஞ்சை செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் மறுவாக்கு எண்ணிக்கை செய்ய உத்தரவிட்டது. அதன்படி, இன்று (நவ. 25) மறுவாக்கு எண்ணிக்கை பணி ஒன்றியக் குழு ஆணையர் ஆனந்த் ராஜ் முன்னிலையில் நடைபெற்று வந்தது. அப்போது மறுவாக்கு எண்ணும் இடத்தில் அதிமுக சார்பில் சம்பந்தப்பட்ட ஒன்றியக்குழு உறுப்பினர் கண்ணகி கண்ணன் மட்டும் அனுமதிக்கப்பட்டார்.
எதிர்தரப்பு சார்பில் 3 வழக்கறிஞர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் மறுவாக்கு எண்ணும் இடத்தில் அதிமுக உறுப்பினர் கண்ணகி கண்ணனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் உடனடியாக காரில் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்போது மேல் சிகிச்சைக்காக தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையில், மறுவாக்கு எண்ணும் இடத்தில் அதிமுக சார்பில் வேறு பிரதிநிதிகள் இல்லாததால் வாக்கு எண்ணிக்கை தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக ஒன்றியச் செயலாளர் கா.அறிவழகன் கூறியதாவது, "எங்களது பிரதிநிதிகள் யாரும் இல்லாததாலும், சம்பந்தப்பட்ட கவுன்சிலரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடர்ந்தால், கட்சியின் உயர்மட்டத் தலைவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் உயர் நீதிமன்றத்தை நாடி தீர்வு காண்போம்" என்று கூறினார்.
இதையும் படிங்க:"இனிமேலாவது ஆளுநர்கள் திருந்தினால் பரவாயில்லை" - அமைச்சர் துரைமுருகன் கடும் தாக்கு!