தஞ்சாவூர்: உலகெங்கும் உள்ள இந்தியர்களால் உற்சாகமாக கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை நாளை மறுதினம் 24 ஆம் தேதி கொண்டாடப்படுவதாலும், தொடர்ந்து மறுதினம் அமாவாசை, கேதார கௌரி விரதம், கந்தசஷ்டி விழா தொடக்கம் என விசேஷங்கள் அணிவகுப்பதால், பூக்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
இருப்பினும் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் பூக்களின் வரத்து குறைந்துள்ளது இதனால் தேவைக்கு ஏற்ப, பூக்கள் வரத்து இல்லாத நிலையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக மல்லிகை, முல்லை மற்றும் கனகாம்பரம் ஆகியவை கிலோ ரூ.1000 இருந்து ரூ,1,200 வரை விற்பனையாகிறது. சிவப்பு, மஞ்சள் ரோஜா ரகங்கள் கிலோ ரூ.160க்கும், செவ்வந்திப்பூ கிலோ ரூ.200க்கும் விற்பனை ஆகி வருகிறது.