தஞ்சாவூர்: களிமேடு கிராமத்தில் உள்ள அப்பர் மடத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாத சதய நட்சத்திர நாளில் அப்பர் சதய விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி 94ஆம் ஆண்டாக மூன்று நாள் அப்பர் சதய விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. வெகு விமரிசையாக நடைபெற்று வந்த இத்திருவிழாவில் இரவில் மின் அலங்கார தேர் புறப்பாடு தொடங்கியது.
தொடர்ந்து களிமேடு கிராமத்திலுள்ள நான்கு வீதிகளிலும் தேர் வலம் வந்தது. புதன்கிழமை (ஏப்.27) அதிகாலை 3.15 மணியளவில் கீழத்தெருவிலிருந்து முதன்மைச் சாலைக்கு வந்த இத்தேரை அதன் தேர் நிலை சேரும் இடத்திற்கு செல்வதற்காக தேரை திருப்பிய போது தேரின் அலங்கார தட்டி எதிர்பாராத விதமாக, மேலே சுமார் 30 அடி உயரத்தில் உள்ள உயரழுத்த மின் பாதையில் உரசியது.
தேர் ஊர்வலம் முடிந்த பிறகு தேரை அதன் நிலை இடத்திற்கு கொண்டு செல்வதற்காக திருப்பியுள்ளனர். அந்த நேரத்தில் சாலையின் ஓரமாக இருந்த உயர் அழுத்த மின்சார கம்பியின் மீது இரும்பினால் செய்யப்பட்டிருந்த தேரின் அலங்காரத் தட்டு உரசியுள்ளது. இதனைத் தொடர்ந்து தேரின் மீது நேரடியாக மின்சாரம் பாயந்ததில் அருகில் இருந்தவர்களும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயமடைந்தனர்.