தஞ்சாவூர்:அரசு வழங்கிய சிஆர் 1009, ஏடிடீ 51 விதை நெல்களை பயன்படுத்தி சம்பா சாகுபடி செய்த கும்பகோணம் விவசாயிகள், நெற்பயிர்கள் போதிய வளர்ச்சியின்றி பூச்சிகளின் தாக்குதலுக்கு உள்ளானதால் வேதனையடைந்துள்ளனர். இது குறித்து வேளாண் அதிகாரிகள் உரிய பதிலளிக்காததால், செய்வதறியாத விவசாயிகள் குழந்தை போல, வளர்த்த நெற்பயிர்களை டிராக்டர் கொண்டு அழித்த படி, கண்ணீர் வடிக்கின்றனர்.
இப்பகுதியில் பல விவசாயிகளுக்கும் இந்நிலை ஏற்பட்டுள்ளதால், மீண்டும் சாகுபடி செய்ய பணத்திற்கு என்ன செய்வது என விழிபிதுங்கி நிற்கின்றனர். எனவே, வேளாண்துறை மற்றும் வருவாய்த்துறை மூலம் அரசு உரிய கள ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளனர்.
விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் அரசின் விதை நெல்கள்:கும்பகோணம் அருகே கடிச்சம்பாடி கிராமத்தில் மட்டும் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, இங்கு ஏடிடீ 51, சிஆர் 1009 ஆகிய 160 நாட்கள் கொண்ட நெல் ரகங்கள், டிஏபி ரகங்கள் என வேளாண்துறை வழங்கிய விதை நெல்களை கொண்டும், வழங்கிய உள்ளிட்ட உரங்களை கொண்டும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால், 55 நாட்களை கடந்த நிலையில், பயிருக்கு போதுமான வளர்ச்சி இல்லாத நிலையில் பயிர்கள் குன்றிய நிலையில் பூச்சிகளின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
வளர்ச்சியின்றி குன்றிப்போன பயிர்கள்;வேதனையுடன் விவசாயிகள்:இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விவசாயி சேதுராமன், 'கடிச்சம்பாடி கிராமத்தில் அரசு விற்ற சிஆர் 1009, ஏடிடீ 51 விதை நெல்களை வாங்கி சம்பா சாகுபடி செய்தோம். ஒரு மாதத்தை தாண்டிய நிலையில், பயிர்கள் வளர்ச்சியில்லாமல் குன்றிப்போய் உள்ளன. அரசு தந்த ஏடிபி ரக உரங்களையும் போட்டு விட்டோம்; இருந்தும் பலனில்லை.
விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம்: 6 ஏக்கரில் பயிரிட்ட இந்த நெற்பயிர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்துவிட்டேன். இதுகுறித்து வேளாண் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, அலட்சியமாக பதிலளிக்கவில்லை. தங்கள் பகுதியில் 100 ஏக்கர் வரையில் இது போன்ற பாதிப்புகள் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, இதற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்' என அவர் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து கேட்டால் அதிகாரிகள் அலட்சியமான பதில்:இதுகுறித்து வேளாண்துறையினரை கேட்டால், அவர்கள் டிஏபி அதிகம் பயன்படுத்த வேண்டாம்; இதனால், கூடுதல் பாசி பிடிக்கிறது என்கின்றனர். டிஏபி உரம் போட்ட பிறகே, இதனை வேளாண்துறையினர் தெரிவிக்கின்றனர்.