தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசுப் பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் பற்றாக்குறை - அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் என்ன? - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

அரசுப் பள்ளிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், இது தொடர்பாக பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தலைமையாசிரியர்களே இல்லை என்று கூற முடியாது என்றும், தலைமையாசிரியர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.

EDUCATION MINISTER
தலைமை

By

Published : Jun 2, 2023, 4:06 PM IST

ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பாக, சிறப்பாக பணியாற்றிய அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு, 150 ஆசிரியர்களுக்கு "ஒளிரும் ஆசிரியர் விருது" வழங்கினார்.

அதேபோல், 100 சதவீதம் தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்கள், போட்டித் தேர்வுகளுக்கு சிறந்த முறையில் பயிற்சி வழங்கிய ஆசிரியர்கள் என 1,700 ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும், சிறப்பாக செயலாற்றிய பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கும், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினருக்கும் விருதுகளும் வழங்கி கெளரவித்தார். மேலும், பள்ளி ஆசிரியர்களின் நூல்களையும் அமைச்சர் வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "அரசுப் பள்ளிகளில் இன்னும் அதிகப்படியான தேர்ச்சி விழுக்காட்டை கொண்டு வர வேண்டும் என்று ஆசிரிய பெருமக்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறோம். தனியார் பள்ளிகளில் பேருந்தை ஆய்வு செய்ய வேண்டும் என்று போக்குவரத்து துறை அமைச்சரிடம் தெரிவித்து, அதன்படி சுற்றறிக்கை அனுப்பப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.

அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் பற்றாக்குறை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், "இது பள்ளிக் கல்வித்துறை சார்ந்தது மட்டுமல்ல. சீனியாரிட்டி படி கொடுப்பதா, அல்லது மெரிட் படி கொடுப்பதா என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது, தீர்ப்பு வரும். தலைமையாசிரியர்களே இல்லை என்று சொல்ல முடியாது, அவர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு அனைத்து பள்ளிகளிலும் பணியாற்றி வருகின்றனர்" என்று தெரிவித்தார்.

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து பேசிய அவர், "கடந்த மே மாதத்தில் மட்டும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர். பள்ளி 7ஆம் தேதி திறந்ததும் முழு தகவலும் தெரிய வரும். கடந்த இரண்டு வருடத்தில் 11 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியை தேடி வந்துள்ளனர். இதற்கு காரணம் புதுமைப் பெண் திட்டம், 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு, வானவில் மன்றம், STEM லேப் போன்ற முதலமைச்சரின் பல்வேறு திட்டங்கள்தான். வட மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலர் மூலம் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. எல்கேஜி வகுப்பில் ஏறத்தாழ 2,381 பள்ளிகளில் இதுவரை 40 ஆயிரம் பள்ளி மாணவர்கள் சேர்ந்துள்ளனர்" என்று குறிப்பிட்டார்.

இந்த விருது வழங்கும் விழாவில், தஞ்சை மாநகராட்சி மேயர் ராமநாதன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, துணை மேயர் அஞ்சுகம்பூபதி, முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார், ஆதவா தொண்டு நிறுவனத்தின் பாலகுமரேசன் மற்றும் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: "அரசுப் பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்" - ஆசிரியர்கள் வலியுறுத்தல்!

ABOUT THE AUTHOR

...view details