தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகளாக விளங்குகின்றன. நாட்டு மக்கள் பசியின்றி வாழ இப்பகுதி விவசாயிகள் தமிழ்நாட்டினை இந்தியாவின் உணவு கிண்ணமாக மாற்ற முயற்சித்துவருகின்றனர்.
ஆனால் கடந்த மார்ச் மாதம் கரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டதால் பெரு நகரங்களில் வசித்த மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி தங்கள் நிலங்களில் விவசாயப் பணிகளைத் தொடங்கத் திட்டமிட்டனர்.
அவர்களுக்கு ஏற்றவாறு, டெல்டா பகுதிகளின் பிரதான பாசனமான காவிரி கடந்த எட்டு ஆண்டுகளாக பொய்த்துப்போன நிலையில், இவ்வாண்டு மேட்டூர் அணையில் நீர் வரத்து 100 அடியை எட்டியதால், ஜூன் மாதம் முதல் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு விவசாயப் பணிகள் தொடங்கப்பட்டன.
வழக்கமாகப் பயிரிடும் விவசாயிகள் மட்டுமின்றி, இம்முறை பலரும் குறுவை சாகுபடியை மேற்கொண்டனர். இதனால் விவசாய கூலி தொழிலாளர்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டது.
வயல்வெளிகளில் பொதுவாக நெல் அறுவடை செய்யும் பணி என்றால் நாற்று பாவுதல், வரப்பு வெட்டுதல் , நாற்று நடுதல், களை பறித்தல் போன்ற பிரதான பணிகள் இருக்கும். பின் அறுவடை செய்தல், நெல்லினை தூற்றி, காயவைத்து மூட்டையில் வைப்பதற்கு பெரு விவசாயிகள் விவசாய கூலி தொழிலாளர்களை பயன்படுத்துகின்றனர்.
விவசாய இடுபொருள்களான உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் கூட்டுறவு வங்கிகளில் சரிவர கிடைக்காதததால், உரங்களைப் பெறவே நகைகளை அடகு வைக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர். இந்நிலையில், கரோனா அச்சுறுத்தலால் விவசாய கூலித் தொழிலாளர் பணிக்கு வரத் தயங்கும் காரணத்தால் சில விவசாயிகள் இயந்திரங்களை பயன்படுத்தி நெல் சாகுபடி செய்து வருகின்றனர். ஆனால், இயந்திரங்கள் அனைத்து பகுதிகளிலும் கிடைக்காததால் அதிக ஊதியம் கொடுத்து கூலித் தொழிலாளர்களை பயன்படுத்தும் நிலைக்கு விவசாயிகள் மீண்டும் தள்ளப்பட்டுள்ளனர்.
இவ்வளவு துயருக்கு பின்பும் அறுவடை செய்த நெல்லுக்கு உரிய விலை கிடைக்காததால் மாட்டிற்கு உணவளிக்கும் வைக்கோல் மட்டுமே எங்களுக்கு லாபமாகக் கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி, வங்கியில் கூட்டு வட்டி செலுத்தும் நிலையும் ஏற்பட்டுள்ளது என்று வேதனை தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.
வேலையாட்கள் உண்டு... பணம்தான் இல்லை - தஞ்சை விவசாயிகள் வேதனை இனி வரும் காலங்களில் விவசாயிகள் இதுபோன்ற மன அழுத்தத்தை சந்திக்காமல் இருக்க மத்திய அரசின் மாகத்மா காந்தி ஊராக வேலை திட்டதில் கிழ் வேலை செய்யும் வேலையாட்களை அரசாங்கம், விவசாய பணிகளுக்கும் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தால் விவசாயிகளுக்கு அவை பேருதவியாக அமையும் என்ற கோரிக்கையையும் முன்வைக்கின்றனர்.