தஞ்சாவூர்: சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு ஸ்ரீதியாகராஜர் திருவாரூரில் பிறந்து திருவையாறில் வாழ்ந்து திருவையாறு காவிரிக்கரையில் 1847ஆம் ஆண்டில் முக்தி அடைந்தவர். இவர் இயற்றிய தெலுங்கு கீர்த்தனைகள் கர்நாடக சங்கீத ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அவரை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் திருவையாறில் அமைந்துள்ள அவரது சமாதி அருகே தியாக பிரும்ம மகோத்சவ சபையால் ஆராதனை விழா வெகுவிமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்தாண்டு 176ஆவது ஆராதனை விழா சிறப்பாக தொடங்கியது. இந்த ஆராதனை விழாவில் நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த கர்நாடக இசைப்பிரியர்கள் மற்றும் பிரபல கர்நாடக வித்வான்கள் கலந்துகொண்டு இசைக் கச்சேரியை நடத்திவருகின்றனர். இந்த ஆராதனை விழா ஜனவரி 11ஆம் தேதி வரை 6 நாட்கள் நடைபெறுகிறது.
ஆராதனை தொடக்க விழாவில் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் காசி விஸ்வநாதர், அன்னபூரணி, காசி விசாலாட்சியும் இருக்கிறார்கள், இதுதான் நமது நாட்டின் பெருமை.