தஞ்சாவூர்:திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் 'குறுவை சாகுபடி'-க்காக வரும் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் (Mettur Dam) இருந்து தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். கடைமடை வரை தண்ணீர் சென்று சேர்வதற்காக ஆண்டுதோறும் மேட்டூர் அணை திறப்பதற்கு முன்னதாக அப்பகுதியில் உள்ள ஆறுகள், ஏரிகள், வாய்க்கால்கள் தூர்வாரப்படும்.
அதைபோல், இந்த ஆண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள் உள்ளிட்டவைகளை தூர்வாரும் பணிகள் 4773.13 கி.மீ. நீளத்திற்கு ரூ.90 கோடி மதிப்பில் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 189 பணிகள் 1068.45 கி.மீ. நீளத்திற்கு ரூ.20 கோடியே 45 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பில் நடந்து வருகிறது.
இந்தப் பணிகளை கண்காணிக்க ஏற்கனவே, மாவட்டந்தோறும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த ஆண்டு 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அதற்கானப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணி குறித்து நேரடியாக ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு தஞ்சாவூருக்கு வந்தடைந்தார்.
இதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 9) காலையில் முதலில் தஞ்சாவூரை அடுத்த வல்லம் ஆலக்குடி முதலைமுத்து வாரியில் நடந்து வரும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து, ரூ.40 லட்சம் மதிப்பில் நடந்து வரும் தூர்வாரும் பணிகள் முடிந்துள்ள விவரங்களை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் எடுத்துரைத்தார். முன்னதாக, டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் முடிவடைந்த விவரங்கள் அடங்கிய புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர், அங்கு கூடியிருந்த விவசாயிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். அப்போது, கடந்த ஆண்டு கடைமடை வரை தண்ணீர் சென்றதைப் போல், இந்த ஆண்டும் கடைமடை வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.