''மாபெரும் தமிழ்க்கனவு'' என்னும் தலைப்பில் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்வு தஞ்சாவூர்: கும்பகோணம் இதயா மகளிர் கல்லூரியில் கலையரங்குகளில், கல்லூரி முதல்வர் யூஜின் அமலா தலைமையில் இன்று ''மாபெரும் தமிழ்க்கனவு'' என்னும் தலைப்பில் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்வு நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குநர் கரு. பழனியப்பன் ''பெண் கல்வி, தமிழ்நாடு கடந்து வந்த பாதை எனும் தலைப்பிலும்'', திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் யுகபாரதி, ''சொல்லுக சொல்லில் பயனுடைய'' எனும் தலைப்பிலும் சொற்பொழிவாற்றினர்.
கரு. பழனியப்பன் தனது சொற்பொழிவில், இன்றைய பெண்கள் படித்தால் மட்டும் போதாது என்றும், தற்போது இந்திய அளவில் உயர்கல்வி பயிலும் பெண்களில், 51 சதவீத பெண்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற பெருமையோடு குறிப்பிட்ட அவர், ''பெண்கள் கல்வி கற்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், பணிக்கு செல்ல வேண்டும், தொழில் தொடங்க வேண்டும், வருவாய் ஈட்டி, தங்கள் சொந்த காலில் நிற்க வேண்டும். ஏன் என்றால் இன்றைய கால கட்டத்தில் பணம் ரொம்ப முக்கியம். அவசியம்'' என்றும்; ''அந்த வருவாயும், அறம் பேசி, ஒழுக்கமான வழியில் ஈடுபடுவதாகவும் அமைய வேண்டும்'' என்றார்.
மேலும் சமூக நீதி என்பது உயர் வகுப்பினருக்கு கிடைக்கும் சலுகைகளும், உரிமைகளும், ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கும் கிடைக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, அதே வேளையில், ஆண்களுக்கு கிடைக்கும் அனைத்தும் பெண்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே ஆகும் என்றார்.
தொடர்ந்து பேசிய திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் யுகபாரதி தனதுரையில், ''தமிழ்நாட்டில் பெண்கள் தற்போது அதிகம் படிப்பறிவு பெற்று வரும் நிலையில் சமீபத்திய திரைப்படங்கள் பெரும்பாலானவை பெண்கள் கல்வியை வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக அசூரன், ஜெய்பீம் போன்ற படங்களைக் குறிப்பிடலாம். காரணம், பெண்கள் முடிவு எடுக்கும் நிலைக்கு வர வேண்டும். இன்றைய தமிழ்ப்பெண்கள் அதிகம் கல்வி கற்க வழிவகுத்தது அம்பேத்கரும், பெரியாரும் தான்.
எனவே, அவர்களுக்குப் பெண்களாகிய நீங்கள் என்றைக்கும் நன்றியுள்ளவர்களாகவும், விஸ்வாசிகளாகவும் இருக்க வேண்டும் என்றும், மானமும் அறிவும் மனிதருக்கு அழகு என பெரியார் கூறியுள்ளார். இதற்கான பொருள் என்பது, நம்மை நாம் யார் என்று பிறருக்கு உணர்த்துவது மானம்; நம்மை நாம் யார் என்று உணர்வது அறிவு'' என்றும் கவிஞர் யுகபாரதி புதிய விளக்கம் அளித்து பேசினார். இந்நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளும், பேராசிரியப் பெருமக்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:"விடுதலை" பாகம் 1 ரிலீஸ்; ஆரவார கொண்டாட்டத்தில் ரசிகர்கள்...படம் எப்படி இருக்கு?