தஞ்சாவூர்:கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில், முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாகும். இந்த கோயில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்பு கொண்டது. மேலும் 60 தமிழ் வருட தேவதைகளை, 60 படிக்கட்டுகளாக அமையப்பெற்ற கட்டுமலைக் கோயிலாகும்.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை பெருவிழா 12 நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் கடந்த நவம்பர் 28ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் காலையில் படிச்சட்டத்திலும், இரவு பல்வேறு வாகனங்களிலும் சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, ஒன்பதாம் நாளான திருக்கார்த்திகை தினமான இன்று (டிச.6) அதிகாலை சாமிநாத சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அப்போது சாமிக்கு தங்க கவசம் மற்றும் வைரவேல் ஆகியவை அணிவிக்கப்பட்டது. பிறகு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி, விசேஷ மலர்களால் அலங்கரிக்கப்பட்டு திருத்தேருக்கு எழுந்தருளினார்.