'மீண்டும் நரேந்திர மோடியே பிரதமர் ஆவார்' - எஸ்.வி.சேகர் தஞ்சாவூர்: கும்பகோணம் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் பாஜக நிர்வாகி எஸ்.வி.சேகர் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், '2024 நாடாளுமன்ற தேர்தலில், மத்தியில் மீண்டும் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று, பாஜக ஆட்சி அமையும். தொடர்ந்து 3வது முறையாக, மீண்டும் நரேந்திர மோடி பிரதமராவர் என்றார்.
அதேவேளையில், பாஜக தமிழக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு, அவரை வளர்த்துக்கொள்வதில் காட்டும் ஆர்வத்தை கட்சி வளர்ச்சியில் காட்டாததால், தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி பூஜ்ஜியமாக மாறியுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில், திமுக கூட்டணி நிச்சயம் 30 இடங்களில் வெற்றி பெறும்' என்று ஆரூடம் கூறினார்.
'அண்ணாமலை அரசியல் அனுபவம் இல்லாமல் தலைவராக வந்தவர். கட்சியில் ஒரு மாதம் கூட உறுப்பினராக இல்லாதவர், அண்ணாமலை. தலைமையில் தமிழக பாஜக, நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கும். அறிவுபூர்வமாக பேசுவதில் அண்ணாமலை யாரும் விஞ்ச முடியாது. இரு தினங்களுக்கு முன்பு பேசும்போது, முதல் குடியரசு தினவிழாவிற்கான அழைப்பிதழை மகாத்மா காந்திக்கு வழங்கவில்லை எனக் கூறி, அவர் அப்போது (1950) உயிருடன் இல்லை என்பதை கூட தெரியாதவராக உள்ளார். அவர் மைக் கிடைத்தால் வியாதியஸ்தர் வாந்தி எடுத்ததைப் போல, எதை எதையோ வாய்க்கு வந்ததை உளறி வருகிறார்' என சாடினார்.
அண்ணாமலை தமிழ்நாட்டிற்கே ஒரு வேஸ்ட் என்றும் நாம் உயரத்திற்கு போக போக ஆட்டம் அதிகமாக இருக்க வேண்டும், அதனை முறையாக பேலன்ஸ் பண்ண தெரிந்திருக்க வேண்டும். ரஜினியை பாருங்கள் அவர் உயரத்திற்கு போக போக, அளவோடு தான் பேசுவார்' என்று குறிப்பிட்டார்.
'தான் 2010-ல், இனி எந்த தேர்தலிலும் நிற்க மாட்டேன் என உறுதியோடு தான் 2013-ல் நரேந்திர மோடி தலைமையில் உலகெங்கும், தமிழர்கள் வாழும் இடங்களில் பாஜகவிற்காக பிரச்சாரம் செய்வேன் என கூறி, பாஜகவில் என்னை இணைத்துக் கொண்டேன் என்றும், தேசிய கட்சிகளில் மாநில தலைமைக்கு நடிகர்களை பிடிக்காது என்றும், அண்ணாமலை சூட்சமம் தெரிந்தவர்.
அதனால் தான், நடிகை நமீதாவை போல, எனக்கோ ராதாரவிக்கோ பல மணி நேரம் பேச வராது என்றும் அதனால் எங்களை விரும்ப மாட்டார்கள். நாங்கள் கவர்ச்சிக்காக தான் கட்சியில் இருக்கிறோம் என்றும், நடிகை கௌதமி விவகாரத்தில் பாஜக பிரமுகரே ரூ.25 கோடி அளவிற்கு முறைகேடு செய்திருப்பது கண்டிக்கதக்கது என்றும், பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேற காரணமாக இருந்தவர் அண்ணாமலை தான்' என குறிப்பிட்டார்.
தொடர்ச்சியாக பேசிய அவர், 'தமிழகத்தில், பிராமணர்களின் ஓட்டு வங்கியை நிரூபிக்கும் வகையில், அறவோர் முன்னேற்ற கழகம் என்ற கட்சி உருவானது. தமிழகம் முழுவதும் 45 லட்சமாக உள்ள பிராமண வாக்காளர்கள் இக்கட்சிக்கு 4 லட்சம் வாக்குகள் அளித்தால் கூட, தமிழகத்தில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது 3 லட்சம் வாக்குகள் தான் என்பதால், ஒரு கட்சியின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் இக்கட்சியாக மாறும்.
எனவே, வரும் நாடாளுமன்ற தேர்தலில் இக்கட்சி தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் (7 தனித்தொகுதிகள் உட்பட) போட்டியிடும் என்றும், நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் வாக்கு வங்கியை நிரூபித்து, அதனை வைத்து வரும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில், தங்களது குறைந்தபட்ச கோரிக்கையை நிறைவேற்ற உத்தரவாதம் அளிக்கும் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்றார். மேலும், குறைந்தபட்சம் 3 சதவீத இடஒதுக்கீடு, 7 சட்டமன்ற தொகுதி ஒரு நாடாளுமன்ற தொகுதி என்ற ரீதியில் போட்டியிடும்' என்றார்.
இதுகுறித்து வரும் 19ஆம் தேதி சென்னை மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப்பில் நடைபெறும் கூட்டத்தில், 'தமிழகத்தில் பிராமணர்கள் எதிர்காலம்' என்ற தலைப்பில் பேசவுள்ளேன். எல்லா சமூகத்திற்கும் தமிழக சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ளது. ஆனால், பிராமணர்களுக்கு இல்லை. கடைசியாக ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 3 எம்எல்ஏக்கள் இருந்தது தான் கடைசி' என வேதனையுடன் குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அவர், 'தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது தேர்தல் வாக்குறுதிப்படி, விரைந்து கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்ட புதிய வருவாய் மாவட்டம் அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என எஸ்.வி.சேகர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க:பாஜகவை வீழ்த்த 'இந்தியா' கூட்டணி வகுத்துள்ள திட்டம் என்ன? - மு.க.ஸ்டாலின் அளித்த பிரத்யேக பேட்டி!