தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் சலீம். இவர் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதி கரோனா தொற்று காரணமாக அவர் உயிரிழந்து விட்டதாகக் கூறி தனியார் மருத்துவமனை நிர்வாகம் அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தது.
இதையடுத்து, சலீமின் குடும்பத்தினர் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் எனவே அவரது உடலைத் தோண்டி எடுத்து உடற்கூறாய்வு செய்ய வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர் ஆகியோரிடத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
இந்நிலையில், நேற்று (செப்.24) இறந்த சலீமின் உடலைத் தோண்டி எடுத்து உடற்கூறாய்வு செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்து, பட்டுக்கோட்டை வட்டாட்சியர் தரணிகா முன்னிலையில் உடலைத் தோண்டி எடுக்கும் பணி நடைபெற்றது.
இதற்காக பட்டுக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் தலைமையில் அங்கு ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவர் சரவணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் உயிரிழந்தவரின் உடலை உடற்கூறாய்வு செய்தனர்.