அரசு கால்நடை மருத்துவமனையில் 50 ஆயிரம் மதிப்பிலான அறுவை சிகிச்சை உபகரணங்கள் திருட்டு தஞ்சாவூர்: கும்பகோணத்தை அடுத்துள்ள ஆடுதுறை ரயில் நிலையம் அருகில் அரசு கால்நடை மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனை கட்டடம் பெரும்பகுதி சேதமடைந்துள்ளதால், இதன் அருகிலேயே ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில், நவீன வசதிகளுடன் கூடிய புதிய மருத்துவமனை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு விரைவில் திறக்கப்பட உள்ளது.
இந்நிலையில், பழுதடைந்துள்ள மருத்துவமனையில் மருத்துவ உபகரணங்களை பாதுகாப்பாக வைக்க முடியாத நிலையில், புதிய மருத்துவமனை கட்டட வளாகத்தில் இவற்றை பாதுகாக்கும் வகையில் மருத்துவர்கள் மற்றும் கால்நடைத்துறை பணியாளர்கள் வைத்துள்ளனர். கடந்த இரண்டு வாரமாக அவ்வப்போது பொருட்கள் தேவைப்படும்போது மட்டும் கட்டிடத்தை திறந்து பொருட்களை எடுத்து பயன்படுத்தியும் வந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று மருந்து பொருட்கள் எடுப்பதற்காக கால்நடை உதவி மருத்துவர் ஜானகிப்பிரியா சென்றபோது புதிய கட்டடத்தின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், வளாகத்தின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த ரூபாய் 50 ஆயிரம் மதிப்பிலான கால்நடை அறுவை சிகிச்சை உபகரணங்கள் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
இது குறித்து தகவல் அறிந்து ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின் நேரில் வந்து பார்வையிட்டு, இது போன்ற சம்பவங்கள் இனி எங்கும் நடைபெறாத வகையில் இரவு நேரங்களில் போலீசார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும் என திருவிடைமருதூர் டிஎஸ்பியிடம் கோரிக்கை வைத்துள்ளார். மேலும், இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில், திருவிடைமருதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தஞ்சையில் ரூ.14 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி தீயணைப்பு அலுவலர் கைது!