தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே பாபநாசம் வட்டம், திருமண்டங்குடி கிராமத்தில் செயல்பட்டு வந்த திருஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை கடந்த 2018ஆம் ஆண்டு நஷ்டம் ஏற்பட்டதாக கூறி திடீரென மூடப்பட்டது. இதனால் அரவைக்கு, கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சுமார் நூறு கோடி ரூபாய் அளவிற்கு நிலுவை தொகை வழங்காமல் நிறுத்தி வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் விவசாயிகளுக்கு தெரியாமல் பல பொதுத்துறை வங்கிகளில், விவசாயிகள் பெயரில் கடனை பெற்று ஆலை நிர்வாகம் எடுத்துக் கொண்ட தொகை மட்டும் ஏறத்தாழ 300 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. இதனை கண்டித்து பல விதமான ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள் போராட்டங்கள் நடத்தியும் ஆலையின் மீது அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனையடுத்து ஆலையை மற்றொரு தனியார் நிறுவனமான கால்ஸ் நிறுவனம் ஏலத்தில் எடுத்து, கடந்த மாதம் இதன் உற்பத்தியை தொடங்கியது. இந்நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் தேதி முதல் விவசாயிகள், ஆலை நிர்வாகம் முன்பு தங்கள் நிலுவை தொகையினை வட்டியுடன் வழங்கக் கோரி 415 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.