இலவச தொழில்நுட்ப, திறன் மேம்பாடு பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே உள்ள பாபநாசத்தில், பொறியியல் மற்றும் கணினி அறிவியல் பட்டதாரிகள் பயன்பெறும் வகையில், ஸ்ரீ ஸ்ரீ கிராமப்புற ஆக்கப்பூர்வ திறன் மேம்பாட்டு மையத்தில் ஆறு மாத காலம் இலவச தொழிற்நுட்ப மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்ற 39 மாணவ, மாணவியர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இதில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம் மற்றும் சிட்டி யூனியன் வங்கி மேலாண் இயக்குனர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் எஸ்.காமகோடியும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி பாராட்டினர். இந்தியாவில் 68 சதவீத இளைஞர்கள் கிராமப்புறங்களில் உள்ளனர். மேலும் அங்கு தரமான கல்வி வாய்ப்புகள் இல்லாததால், புதிய பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்தும் தகவல் தொழில்நுட்பத் துறை வேலைவாய்ப்புத் திறன் பற்றாக்குறை என்பது கணிசமான அளவு உள்ளது.
எனவே, கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி அதிக அளவிலான கிராமப்புற மாணவர்கள் தொழில்நுட்பத் துறையின் பணி பெற்றிடும் வகையில் அவர்களை தயார் செய்ய ஏதுவாக ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் குருஜியின் எண்ணப்படி, அவர் பிறந்த கும்பகோணம் அருகேயுள்ள பாபநாசத்தில் முதன் முதலில் ஸ்ரீ ஸ்ரீ கிராமப்புற ஆக்கபூர்வத் திறன் மேம்பாட்டு மையம் தொடங்கப்பட்டது.
வரும் 2025ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியா முழுவதும் 25 எண்ணிக்கையிலான இத்தகைய மையங்களை திறந்து, அதன் வாயிலாக 5 ஆயிரம் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகள் எளிதாக பெற்றிட உரிய பயிற்சியினை இலவசமாக 6 மாத காலம் வழங்க திட்டமிட்டப்பட்டது.
இதன்படி, முதல் பயிற்சி மையமான பாபநாசம் மையத்தில், 6 மாத கால திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்றவர்களுக்கு ஜாவா, ஜெ யூனிட், ஆர்டிபிஎம்எஸ் எஸ்க்யூஎல், எச்டிஎம்எல், வலைதள மேம்பாடு, சிஎஸ்எஸ்3, ஜாவா ஸ்கிரிப்ட், ஜெகுவரி, ஜாவா திட்டங்கள், ஆங்கில தொடர்பு திறன், வாழ்க்கை திறன், நேர்காணல் திறன் என பலவற்றை உள்ளடக்கிய பாடத்திட்டத்துடன் கிளவுட், டேட்டா, உள்கட்டமைப்பு ஆதரவு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட தொழில்நுட்பத் திறன்களை கொண்ட பாடத்திட்டம் உருவாக்கி பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சி முடித்த 39 மாணவ மாணவிகளுக்கு கும்பகோணம் அடுத்துள்ள சுந்தரபெருமாள் கோயில் பகுதியில் அமைந்துள்ள தனியார் சொகுசு விடுதியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பட்டம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில், உலகளாவிய திறன் மேம்பாட்டுத் தலைவரான ஷோபா ஸ்ரீதரன், மைய இயக்குநர் சீனிவாசன் கிருஷ்ணன், ஊடக ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ் வைத்தியநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: அரசு கலை மற்றும் அறிவியியல் கல்லூரிகளில் 81,107 மாணவர்கள் சேர்க்கை!