தஞ்சாவூர்:நகர்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டிற்கு எவ்வளவு தண்ணீர் தரப்பட வேண்டும் என்று, இடைக்காலத் தீர்ப்பை வழங்கும் அதிகாரத்தை காவிரி நடுவர் மன்றத்திற்குப் பெற்றுத்தந்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. பின்னர், இறுதித் தீர்ப்பைப் பெற வழக்கை விரைந்து முடிக்கப்பாடுபட்டதும் அவர் தலைமையிலான ஆட்சிதான்.
காவிரி இறுதித் தீர்ப்பும் அவர் முதலமைச்சராக இருந்த போதுதான் 2007ஆம் ஆண்டு வந்தது. இவ்வாறு நீண்ட நெடிய போராட்டங்களின் வாயிலாக, தமிழ்நாட்டின் காவிரி உரிமையைக் காப்பாற்றிய இயக்கம்தான் திமுக.
தஞ்சாவூர் மாவட்ட உழவர்களுக்கு மட்டுமல்ல - டெல்டா மாவட்டங்களுக்கு மட்டுமல்ல - தமிழ்நாட்டு உழவர்களுக்கு மட்டுமல்ல - மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்து வாக்களித்ததன் மூலமாக ஒட்டுமொத்த இந்திய வேளாண் பெருங்குடி மக்களுக்கே, துரோகியாக விளங்கியவர்தான் எடப்பாடி பழனிசாமி. அவரை பாஜக பழனிசாமி என்றே அழைக்கலாம். அந்தளவிற்கு பாஜக வாய்ஸில் மிமிக்ரி செய்துகொண்டு இருக்கிறார்.
'துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி'