தஞ்சாவூர்: திருவையாறு தியாகராஜர் ஆராதனை திங்கள்கிழமை (பிப்.1) மாலை தொடங்குகிறது.
திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் சுவாமிகளின் 174ஆவது ஆராதனை விழா இன்று மாலை 4.30 மங்கல இசையுடன் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து 5 மணிக்கு 174ஆவது ஆராதனை தொடக்க விழா நடைபெறுகிறது.
இவ்விழாவிற்கு தியாகப்பிரம்ம சபை தலைவர் ஜி.கே. வாசன் தலைமை வகிக்கிறார். சபா செயலாளர் அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல் வரவேற்று பேசுகிறார். மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ், அறங்காவலர்கள் கலந்துகொள்கிறார்கள். சபை செயலாளர் ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ் நன்றி கூறுகிறார். அதைத்தொடர்ந்து மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணிவரை இசைநிகழ்ச்சி நடக்கிறது.
மறுநாள் 2ஆம் தேதி காலை 5.30 மணிக்கு உஞ்சவிருத்தி பஜனை நடக்கிறது. விழா பந்தலில் 8.30 மணி முதல் 9.00 மணி வரை நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடக்கிறது. அதைத்தொடர்ந்து 9 மணிக்கு அனைத்து இசைகலைஞர்களும் ஒன்று சேர்ந்து பஞ்சரத்தின கீர்த்தனை பாடி தியாகராஜர் சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செய்வார்கள்.