தஞ்சையில் விமரிசையாக நடைபெற்ற சிவேந்திர சுவாமி மற்றும் பார்வதி தேவி திருக்கல்யாணம் தஞ்சாவூர்: வடக்கு வீதி பகுதியில் மிகவும் புகழ்பெற்ற இராஜ கோபால சுவாமி (எ) அருள்மிகு சிவேந்திர சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை சார்ந்த 88 திருக்கோயில்களுள் ஒன்றாகவும் திகழ்கிறது. இங்கு மூலவராக விஜயவல்லி மற்றும் சுதர்சன வல்லி சமேதராக ஸ்ரீ சக்கரத்தாழ்வார் திகழ்கிறார்.
பொதுமக்கள், பக்தர்கள் ஆண்டுதோறும் ஆனி மாதம் பிரார்த்தனை செய்து கொண்டு சக்கரத்தாழ்வாருக்கு திருக்கல்யாண உற்சவம் நடத்தி வருகின்றனர். நீண்ட நாட்கள் தடைபெற்ற திருமணங்கள் கூட சக்கரத்தாழ்வார் அருளால் கைகூடிவிடும் என்பது ஐதீகம். இங்கு ஸ்ரீ பார்வதி தேவி மற்றும் கங்கா தேவி, சமேதராக ஸ்ரீ சிவேந்திரர் காட்சி தருகிறார். இங்கு சிவபெருமான் லிங்கம் வடிவில் இல்லாமல் உருவ வடிவில் ஸ்ரீ சிவேந்திரராக அருள்பாலித்து வருவது சிறப்பம்சம் ஆகும்.
இங்கு மாதந்தோறும் நடைபெறும் பிரதோஷ வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்தக் கோயில் விஜய ரகுநாத நாயக்கர் மன்னரால் எழுப்பப்பட்ட கோயில் ஆகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் நேற்று ஜுலை 9-ஆம் தேதி மாலை 18ம் ஆண்டாக ஸ்ரீ பார்வதி தேவி, சமேத ஸ்ரீ சிவேந்திர சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு மாலை நாலுகால் மண்டபம் அருள்மிகு ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் இருந்து மாங்கல்ய சரடு, பழம், பூ, மஞ்சள் கயிறு, குங்குமம் உள்ளிட்ட கல்யாண சீர்வரிசைகளை மங்கல வாத்தியங்கள் இசைக்க, சிவகணங்கள் முழங்க ஊர்வலமாக வந்து பக்தர்கள் எடுத்து வந்தனர்.
பின்னர் இரவு திருக்கல்யாணம் உற்சவம் கோலாகலமாக தொடங்கியது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கணபதி பூஜை செய்து சுவாமிக்கு கங்கணம் கட்டி, யாகம் செய்து, மாலை மாற்றும் வைபோகம் நடைபெற்றது. பின்னர் அதனைத் தொடர்ந்து திருமண சம்பிரதாயங்களை செய்வித்து ஸ்ரீ பார்வதி தேவி சமேத ஸ்ரீ சிவேந்திரருக்கு கன்னிகாதானம் செய்து கெட்டி மேளம் முழங்க மாங்கல்ய தாரணம் விமரிசையாக நடைபெற்றது.
பின்னர் சுவாமிக்கு மஹா தீபாரதனை காட்டப்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்ரீ சிவேந்திரருக்கு நடந்த திருமணத்தை கண்டு ரசித்து தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் பிரசாதமும் வழங்கப்பட்டது. மேலும் பெண்களுக்கு சுமங்கலி பூஜையும் மற்றும் திருமண தடை விலக, குழந்தை பாக்கியம் பெறவும், தொழில் வளம் பெறவும் பக்தர்கள் மாலை மாற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதையும் படிங்க:திருப்பனந்தாள் பெரியநாயகி செஞ்சடையப்பர் கோயில் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு!