தஞ்சாவூர் மாவட்டம், பூண்டி மாதா பேராலய கன்னி மரியாள் பிறப்பு பெருவிழா சிறப்பு நிகழ்ச்சியானது வரும் 8ஆம் தேதி நடைபெறுகிறது. உலகப்புகழ்பெற்ற கிறிஸ்துவ பேராலயங்களில் ஒன்றாகவும், இந்தியாவில் பத்து பசிலிக்காவில் ஒன்றாகவும் பூண்டி திகழ்கிறது. தமிழ்நாட்டில் வேளாங்கண்ணிக்கு அடுத்ததாக கிறிஸ்தவர்கள் தரிசனம் செய்ய நினைக்கும் தேவாலயமாக உள்ளது, இந்த பூண்டி மாதா பேராலயம்.
இந்த பூண்டி மாதா பேராலயத்தில் கன்னி மரியாள் பிறப்பு பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இவ்வாண்டு கரோனா தொற்று காரணமாக, கடந்த ஐந்து மாதமாக பேராலயம் மூடப்பட்டு இருந்த நிலையில், கடந்த 30 ஆம் தேதி ஆலயத்தில் பங்குத் தந்தைகள் மட்டுமே பங்கேற்று கொடியேற்றத்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து நவ நாட்கள், பூஜைகள் நடந்து வருகிறது.
தொடர்ந்து, கடந்த ஒன்றாம் தேதி முதல் தமிழ்நாடு அரசானது ஊரடங்குத் தளர்வை அறிவித்ததையடுத்து, பக்தர்களை தகுந்த இடைவெளியுடனும், கிருமி நாசினி தெளித்தும் பேராலயத்திற்குள் அனுமதிக்கின்றனர்.