தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ பெருவுடையார் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலுக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள், மற்றும் பக்தர்கள் வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்து கோயிலின் கட்டடக் கலையை ரசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அம்மனுக்கு கொண்டாடப்படும் ஆடிப்பூரம் விழா நேற்று சில கோயில்களிலும், இன்று ஜூலை 22ஆம் தேதி சில கோயில்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பெருவுடையார், ஸ்ரீ பெரியநாயகி அம்மன், ஸ்ரீ வாராஹி அம்மன், விநாயகர், வள்ளி தேவசேனா சமேத முருகர், உள்ளிட்ட மூலவர் சுவாமிகளுக்கு திரவியப் பொடி, மஞ்சள், பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து ஆராதனையும் நடைபெற்றது.
உலக மக்கள் அமைதி பெற வேண்டியும், நீர்வளம், நிலவளம் பெருகி விவசாயம் செழிக்கவும், பஞ்ச பூதங்களும் இயற்கைச் சீற்றங்களில் இருந்து தனிய வேண்டியும், இந்த ஏகதின சிறப்பு அபிஷேக ஆராதனை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதே போல் தஞ்சாவூர் மேல வீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கொங்கணேஸ்வரர் கோயிலில் நேற்று (ஜூலை 21) வெள்ளிக்கிழமை இரவு ஆடிப் பூரத்தை முன்னிட்டு, கிழக்கு நோக்கிய அபூர்வமான துர்க்கை அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெற்றது.