தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே மேலவிசலூரில் கறிக்குழம்பைத் தனக்கு இல்லாமல் சாப்பிட்ட தந்தையை ஆத்திரமடைந்த மகன் கத்தியால் குத்திய சம்பவம் நடந்தேறியுள்ளது. இதனால், படுகாயமடைந்த அவரின் முதுகில் கத்தியின் ஒருபகுதி முறிந்து சிக்கிக்கொண்ட சோகமும் நடந்துள்ளது. இதனிடையே, கறிக்குழம்பிற்காக தனது தந்தையை மூர்க்கத்தனமாக கத்தியால் குத்திவிட்டு தலைமறைவாகிய மகனை, போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
கும்பகோணம் அருகே நாச்சியார்கோயில் காவல் சரகம் மேலவிசலூர் கிராமம், காந்திநகரில் வசிப்பவர் மோகன்தாஸ்(60). இவரது மகன் இராமச்சந்திரன்(20) திருமணமாகிய நிலையில் தனக்குத் தனி வீடு வேண்டும் என அவரது தந்தையுடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வீட்டில் நேற்று (மே.11) கறிக்குழம்பு சாப்பாடு தயார் செய்திருந்த போது, அதனை மகன் வரும் முன்பே மோகன்தாஸ் சாப்பிட்டதாகத் தெரிகிறது. இதனால் ஏற்கனவே, தந்தையுடன் இருந்த முன்கோபத்துடன், கறிக்குழம்பு காலியானது தெரிந்ததால் ஆத்திரமடைந்த இராமச்சந்திரன், மோகன்தாஸை தந்தை என்றும் பாராமல், முதுகில் கத்தியால் குத்தியுள்ளார். இதில் கத்தி முறிந்து ஒருபகுதி முதுகிலேயே சிக்கிக்கொண்டது.