தஞ்சாவூர்: தஞ்சை மாநகராட்சி 51 வார்டுகளை உள்ளடக்கியது. இங்கு சேகரிக்கப்படும் குப்பைகள் ஜெபமாலைபுரம் குப்பைக் கிடங்குகளில் கொட்டப்பட்டு, பின்னர் அவை உரங்களாக மாற்றப்பட்டு, தனியார் சிமென்ட் ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில், தஞ்சாவூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைப் பணியினை மேம்படுத்தும் விதமாக நகராட்சி நிர்வாக இயக்குநரின் உத்தரவுப்படி, வெளிக்கொணர்வு (out sourcing) தூய்மைப் பணியாளர் மூலம் பணி மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து திடக்கழிவு மேலாண்மைப் பணி மேற்கொள்வதற்கு ஒப்பந்தப் புள்ளி அறிவிப்பு வெளியிட்டு, குறைந்த ஒப்பந்தப் புள்ளி வழங்கிய தனியார் நிறுவனத்திற்கு பணியினை மேற்கொள்ள கடந்த ஏப்ரலில் மாநகராட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. இதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாநகராட்சி வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவதற்காக 2023 - 2024ஆம் ஆண்டிற்கு 12 கோடியே 14 லட்சத்து 39 ஆயிரத்து 150 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில் வெளிக்கொணர்வு முகமை மூலம் வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களில் குப்பைகளை சேகரிக்கவும், மேலும் குப்பைகளை எம்சிசி நிலையத்திற்குக் கொண்டு செல்லும் பணிக்கு அலுவலக வாகனங்களைப் பயன்படுத்திக் கொள்ளவும், அதற்கானப் பராமரிப்பு மற்றும் எரிபொருள் செலவு,
தூய்மைப் பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு ஊதியம் வழங்குதல், பணியாளர்களுக்கு இபிஎப், இஎஸ்ஐ, சீருடை வழங்குதல் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் கோரப்பட்டது. அதில் தனியார் நிறுவனம் டன் ஒன்றுக்கு குறைந்த அளவு ஒப்பந்தத் தொகையாக 3 ஆயிரத்து 430 ரூபாயை அளித்திருந்தது. இந்தப் பணி கடந்த மே முதல் மாநகராட்சி பகுதிகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது.