தஞ்சாவூர்: பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான பஜாஜ் ஆட்டோ, பொறியியல் மற்றும் டிப்ளமோ பட்டதாரிகள், இறுதியாண்டு மாணவர்களுக்கு வளர்ந்து வரும் பணியிட திறன்கள் குறித்து பயிற்றுவிப்பதற்காக பஜாஜ் பொறியியல் திறன் பயிற்சி (BEST) மையத்தை நிறுவுவதற்காக சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
பஜாஜ் ஆட்டோவின் VP-CSR சுதாகர் கூறுகையில் "2026ஆம் ஆண்டுக்குள் உற்பத்தித் துறையில் 33 லட்சம் திறமையான பணியாளர்கள் தேவை என்று வாகன திறன் மேம்பாட்டு கவுன்சில் (ASDC) தீர்மானித்துள்ளது. ஆட்டோமொபைல் துறையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் முக்கியமான பங்குதாரராக உள்ளது. மேலும், இந்தியாவில் 10 சிறந்த மையங்கள் அமைத்து சிறப்பான தொழில் பயிற்சினை வழங்க திட்டமிட்டுள்ளோம்.
மேலும் சாஸ்த்ரா பஜாஜ் பொறியியல் திறன் பயிற்சி (BEST) மூன்றாவது மையம் ஆகும். இம்மையம் இறக்குமதி செய்யப்பட்ட உபகரணங்கள் உள்பட புகழ் பெற்ற 20 விற்பனையாளர்களிடம் இருந்து வாங்கப்பட்ட 160க்கும் மேற்பட்ட மேம்பட்ட பயிற்சி வசதிகளை உள்ளடக்கியது.
மெகாட்ரானிக்ஸ், சென்சார்கள் மற்றும் கன்ட்ரோல், ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் மற்றும் தொழில்துறை 4.0 மற்றும் மேம்பட்ட உற்பத்தி ஆகிய நான்கு வளர்ந்து வரும் பகுதிகளில் பயிற்சி வழங்கப்படும். ஒவ்வொரு மையமும் குறைந்தது 500 மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் அடுத்த ஐந்தாண்டுகளில் 25 ஆயிரம் பயிற்சி பெற்ற பட்டதாரிகள் உருவாக்கப்படுவார்கள்" என கூறினார்.