தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையிலிருந்து பேராவூரணி செல்லும் வழியில் அமைந்துள்ளது ஒட்டங்காடு. இப்பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து - கனகா தம்பதிக்கு மூத்த மகனாகப் பிறந்தவர் சிவகுரு பிரபாகரன்.
பொருளாதார சூழ்நிலையில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த இவர் ஆரம்பத்திலிருந்து கீற்றுக் கொட்டகையாலான வீட்டிலேயே வசித்துவந்தார். பிரபாகரனின் தந்தை மாரிமுத்து சொந்தமாக மர ஆலை ஒன்றையும் நடத்திவந்தார்.
போதிய வருமானம் இல்லாததால் சிவகுரு பிரபாகரன், தன் வீட்டில் எதிர்புறம் உள்ள அரசுப்பள்ளியில் தனது ஆரம்ப கல்வியையும் பின் பன்னிரெண்டாம் வகுப்பு வரை தனது ஊர் அருகே உள்ள பள்ளியிலும் படித்து பள்ளிப் படிப்பை முடித்தார்.
பள்ளியிலே முதல் மதிப்பெண் பெற்ற சிவகுரு பிரபாகரனுக்கு பொறியாளர் ஆக வேண்டும் என்பதே கனவு. இருந்தபோதும் குடும்பத்தின் நிலையைப் புரிந்துகொண்ட அவர், புதுக்கோட்டையில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தார். ஒருகட்டத்தில் தினசரி பேருந்து கட்டணமான ரூபாய் ஐம்பதும் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படவே, பிரபாகரன் தனது தாயின் சகோதரி வீட்டில் தங்கி கல்லூரி படிப்பை முடித்தார்.
கீற்றுக் கொட்டகை டூ கலெக்டர் ஆபிஸ் - இளைஞனின் சாகசப் பயணம் பின் நண்பர் ஒருவர் உதவவே, வேலூர் தந்தை பெரியார் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் படிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. நான்கு ஆண்டுகள் படித்துக்கொண்டே ஐஐடியில் சேர்வதற்காக பயிற்சி பெற்ற இவர், ஐஐடி நுழைவு தேர்வில் தேர்ச்சிப்பெற்று எம்.டெக் படிப்பையும் முடித்தார்.
அதன்பின் ஜேஆர்எஸ்ஸில் தேர்ச்சிப்பெற்று இந்திய ரயில்வே துறையில் சிறிதுகாலம் பணியாற்றினார். பின்னரும் முயற்சியைக் கைவிடாத சிவகுரு பிரபாகரன், இந்தியக் குடிமைப்பணித் தேர்வில் தேர்ச்சிப் பெற்று, தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் சார் ஆட்சியராகப் பணியாற்றிவருகிறார்.
'குடும்ப சூழ்நிலையை உணர்ந்துகொள், படித்தது போதும் வேலைக்குச் செல்' என தாய் அடிக்கடி வற்புறுத்திய நிலையிலும் தன்னம்பிக்கையோடு போராடி புதியதொரு உயரத்தைத் தொட்டுள்ளார் சிவகுரு பிரபாகரன்.
இதுமட்டுமில்லாமல் அப்பகுதி இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ள சிவகுரு பிரபாகரன், தன்னார்வ இளைஞர்களுடன் சேர்ந்து மரக்கன்று நடுதல், ஊர் குளத்தை சுத்தம் செய்தல் போன்ற பணிகளிலும் ஈடுபட்டுவருகிறார்.
இதையும் படிங்க: மீண்டும் உயிர் பெறுமா உப்பளத்தொழில்?