அரியலூர்:விரகாலூர் கிராமம் அருகே இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 9க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பட்டாசுகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசு வழிகாட்டுதலின்படி உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தாலும், சில இடங்களில் முறையாக பின்பற்றாததாலும், எதிர்பாராத விதத்தில் வெடி விபத்துகள் ஏற்பட்டு அசம்பாவிதமும், உயிரிழப்புகளும் சில நாட்களாக நிகழ்ந்து வருகின்றன.
இந்நிலையில் அரியலூர் மாவட்டம், கீழப்பலூர் அருகே உள்ள வெற்றியூர் ஊராட்சியில் உள்ள விரகாலூர் கிராமத்தில், இயங்கி வரும் பட்டாசு தயாரிக்கும், தொழிற்சாலை மற்றும் விற்பனை நிலையத்தில், சிவகாசி மாவட்டத்தை சேர்ந்த 11 கூலி தொழிலாளர்களும், வெளி மாவட்டங்கள் மற்றும் உள்ளுரை சேர்ந்த தொழிலாளர்கள் என சுமார் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
இந்நிலையில், இன்று (செப்.09) வழக்கம் போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராத விதமாக திடீரென இந்த பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் வெடி தயாரிப்பதற்காக வைத்திருந்த, ஏராளமான வெடி மருந்து பொருட்களும், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் என அடுத்தடுத்து வெடித்ததாக கூறப்படுகிறது.