இராஜராஜ சோழனின் 1038ஆம் ஆண்டு சதயவிழா தஞ்சாவூர்: மாமன்னன் இராஜராஜ சோழன் கி.பி 985-ல் சோழப் பெருமன்னனாக அரியணையில் அமர்ந்து அழகிலும், அறிவிலும், ஆற்றலிலும் சிறந்து விளங்கி, இராசகேசரி என்ற பட்டம் பூண்டார். கி.பி 1014 வரை ஆட்சி புரிந்து தமிழகத்தின் பெருமையை உலகறிய செய்தவர் இவர்.
தில்லையில் செல்லரித்த நிலையில் மூடிக்கிடந்த மூவர் தேவார பாக்களை, நம்பியாண்டார் நம்பியின் துணை கொண்டு மீட்டு எல்லா கோயில்களிலும் தேவாரம் ஓத செய்து, சைவ ஆகமங்கள் எனப் போற்றப் பெறும் திருமுறைகளைத் தொகுத்து அளித்த பெருமை இவரையே சாரும்.
சேர நாட்டை இராஜராஜ சோழன் வெற்றிகொண்ட போது, அங்கு சதய நாளில் திருவிழாக் கொண்டாட செய்தார் என்பதை கலிங்கத்துப்பரணி "சதய நாள் விழா உதியர் மண்டலம் தன்னில் வைத்தவன்" என்று கூறுகிறது. பெரிய கோயிலை எழுப்பிய மாமன்னன் இராஜராஜ சோழனின் 1038-ஆம் ஆண்டு சதயவிழா, 24ஆம் தேதி மற்றும் 25ஆம் தேதி சிறப்பாக நடைபெற உள்ளது.
இதனையடுத்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 25ஆம் தேதி அரசு உள்ளூர் விடுமுறையும் விடப்பட்டுள்ளது. இந்த விழாவால் தஞ்சை பெரிய கோயில் முழுவதும் மின் விளக்கு தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு, மின்னொளியில் தங்கம் போல் ஜொலிக்கிறது.
இந்நிலையில், சதய விழாவினை முன்னிட்டு தஞ்சாவூர் மாநகராட்சி மற்றும் தென்னகப் பண்பாட்டு மையம் சார்பில் அக்.22 மாலை தஞ்சை அழகிகுளம் வளாகத்தில், குரு அருணா சுப்ரமணியம் குழுவினரின் பரதநாட்டிய இசை நிகழ்ச்சி மற்றும் கிராமிய கலைகளான தப்பாட்டம் ஆகியவை சிறப்பாக நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி, சதய விழா குழு தலைவர் செல்வம், கவுன்சிலர் மேத்தா உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானார் கலந்து கொண்டு, கலை நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர். தமிழர்களின் கட்டிட கலைக்கும், சிற்பக் கலைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்து வரும் உலக பாரம்பரிய சின்னமான தஞ்சை பெரிய கோயிலை, மாமன்னன் இராஜராஜ சோழன் எழுப்பி உலகமே போற்றும் வகையில் உள்ளது.
ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்த இராஜராஜ சோழன் முடிசூடிய நாள் ஆண்டுதோறும் சதயவிழாவாக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இரண்டு நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் திருமுறை அரங்கம், கருத்தரங்கம், திருமுறை பண்ணிசை, பரதநாட்டியம், கவியரங்கம், சிவதாண்டவம் ஆகியவை நடைபெற உள்ளது.
மேலும் மாமன்னன் இராஜராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல், திருமுறை திருவீதி உலா, பெருவுடையார் பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம், பெருந்தீப வழிபாடு, தேவார இன்னிசை, நாட்டியாஞ்சலி, சுவாமி திருவீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இதையும் படிங்க:வங்கதேசத்தில் பயங்கர ரயில் விபத்து விபத்து; 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு எனத் தகவல்!