தஞ்சை மாவட்டம் நீலத்தநல்லூரில் திடல் மணல்குவாரி, அரசின் அனுமதி பெறாமல் இயங்கிவருகிறது. இங்கிருந்து தினமும் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு லாரிகளில் மணல் ஏற்றிச் சென்று விற்பனை செய்கின்றனர்.
இவ்வாறு மணல் ஏற்றிச் செல்லும் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் அரசு முத்திரையிட்ட போலியான ரசீதைப் பயன்படுத்தி மணல் கடத்தப்படுவதாக வந்த தகவலின்பேரில், நாகை மாவட்ட கனிமவளத் துறை அலுவலர் பிரியா இரவு மணல்மேடு கடைவீதியில் மணல் ஏற்றிச்செல்லும் லாரிகளில் சோதனைமேற்கொண்டார்.
அப்போது, ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்துவந்த நான்கு லாரிகளைச் சோதனையிட்டதில், போலியான ரசீதைப் பயன்படுத்தி மணல் கடத்தியது தெரியவந்தது. இவர்களிடம் விசாரணை செய்துகொண்டிருந்தபோது அங்கு வந்து நின்ற ஒரு காரில் 4 லாரி ஓட்டுநர்களும் ஏறி தப்பிச்சென்றுள்ளனர்.