தஞ்சாவூர்: கும்பகோணம் திப்பிராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பிச்சை என்பவரின் மகன் ஓணான் செந்தில். இவர் தற்போது திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி பகுதியில் வசித்து வருகிறார். இவர் மீது ஏற்கனவே இரண்டு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஓணான் செந்தில் வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காகத் திருவாரூர் நீதிமன்றத்திற்குக் கும்பகோணத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அகிலன் மற்றும் மயிலாடுதுறையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாரதிராஜா ஆகியோருடன் காரில் வந்து விட்டு கும்பகோணம் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்திற்குட்பட்ட நாகலூர் என்கிற இடத்தில் இவர்களது காரை பின் தொடர்ந்து வந்த மற்றொரு கார் இவர்களது காரின் பக்கவாட்டில் உரசி உள்ளது. இதில் ஓணான் செந்தில் பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் கொட்டப்பட்டிருந்த ஜல்லி கற்கள் குவியலில் முட்டி ஏறி நின்று உள்ளது.
அதைத் தொடர்ந்து காரில் இருந்து ஓணான் செந்தில் இறங்கியவுடன் பின்னால் வந்த காரில் இருந்து இறங்கிய ஐந்து நபர்கள் ஓணான் செந்திலைச் சரமாரியாகத் தலை, கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டியுள்ளனர். இதில் தலை முழுவதுமாக சிதைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த ஓணான் செந்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் அந்த கும்பல் வழக்கறிஞர் அகிலனையும் கை, கால், தலை உள்ளிட்ட இடங்களில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது.