தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Kumbakonam:2 வயது குழந்தை உயிரிழந்த சோகம்! காரணமான இளைஞரை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலைமறியல் - to demand arrest of person

கும்பகோணத்தில் மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் 2 வயது குழந்தையை அழைத்து சென்ற இளைஞர் ஆற்றில் விழுந்த விபத்தில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த நிலையில், சம்பந்தபட்ட இளைஞரை கைது செய்ய கோரி குழந்தையின் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 24, 2023, 9:40 PM IST

கும்பகோணம் அருகே 2 வயது குழந்தை உயிரிழந்த சோகம்

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் மாதா கோயில் தெருவை சேர்ந்தவர் பிரிடிக்ஸ் சாம்சன் (22). இவர் கடந்த 19ஆம் தேதி இரவு அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பரின் ரோஜர் என்ற இரண்டு வயது குழந்தையை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு வீரசோழன் ஆற்றின் கரையில் உள்ள மதுபான கடைக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில், பிரிடிக்ஸ் சாம்சன் மது அருந்திவிட்டு குழந்தையை அழைத்துக்கொண்டு மீண்டும் இரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, நிலை தடுமாறி இருசக்கர வாகனத்துடன் வாலிபரும் குழந்தையும் திடீரென ஆற்றில் தவறி விழுந்தனர். இந்த சம்பவத்தின் போது, சிறிது நேரத்தில் இளைஞர் மட்டும் நீந்தி கரையேறி உயிர்த் தப்பினார். ஆனால், இருசக்கர வாகனத்துடன் பரிதாபமாக குழந்தையும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. இது குறித்து தகவலறிந்த திருவிடைமருதூர் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் இரவில் ஆற்றில் குழந்தையை தீவிரமாக தேடினர்.

இதனிடையே, தண்ணீர் அதிக அளவில் சென்றதால் அன்று இரவு தேடுதல் பணியை தொடர முடியாமல், மறுநாள் காலை 4 மணிநேர தொடர் தேடுதலுக்குப் பிறகு இரண்டு வயது குழந்தை ரோஜரின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. இச்சம்பவம், திருவிடைமருதூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த சோகத்தையையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இந்த சம்பவம் நடந்து நான்கு நாட்கள் ஆகியும், குழந்தையின் உயிரிழப்புக்கு காரணமான இளைஞர் பிரிடிக்ஸ் சாம்சன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவரை போலீசார் கைது செய்யவில்லை எனக் கூறியும், குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் இன்று (ஜூலை 24) திருவிடைமருதூர் காவல் நிலையத்தை முன்பு திரண்டதோடு கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில் அமர்ந்து திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, பிரிடிக்ஸ் சாம்சனை கைது செய்ய வலியுறுத்தி கோரிக்கை முழக்கங்களையும் எழுப்பினர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் போலீசார் திருவிடைமருதூர் கடைவீதியில் இருந்து போக்குவரத்தை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர். மேலும், போலீசார் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் 3 மணி நேரமாக இந்த சாலைமறியல் நீடித்தது. இந்நிலையில், மீண்டும் போலீசார் வருவாய்த்துறையினர் இணைந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் சாலைமறியல் கைவிடப்பட்டது.

இருப்பினும் அப்போது காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பானது. தொடர்ந்து போலீஸாருக்கும் போராட்டக்காரர்கள் தரப்பிலும் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட இளைஞர் சாம்சனை கைது செய்ய கோரி பேச்சுவார்த்தை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சிறுவனை இரும்பு சங்கிலியால் கட்டிவைத்து தாக்கிய ஆசிரியர்: "மதரஸா" பள்ளியில் நடந்த கொடூரம்.!

ABOUT THE AUTHOR

...view details