தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள வா.கொள்ளைக்காடு பகுதியில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அரசு பள்ளிகள் மற்றும் காவல் நிலையம் என அனைத்தும் உள்ளதால் இந்த ஊருக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
புதுக்கோட்டை - தஞ்சை மாவட்டம் எல்லை பகுதி என்பதால் போக்குவரத்து வாகனங்கள் அதிக அளவில் இந்த பகுதி வழியாக செல்கின்றன. மேலும் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியிலிருந்து தஞ்சை மாவட்டம் பேராவூரணிக்கு செல்ல வேண்டுமென்றால் வா.கொள்ளைகாடு வழியாகத்தான் செல்ல வேண்டும்.
இந்தப் பிரதான சாலை கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக இருந்து வருகிறது. இந்த வழித்தடத்தில் தான் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சென்று வருகின்றன. மேலும் விவசாய தேவைகளுக்காக செல்லும் வாகனங்களும் இந்த சாலையில்தான் செல்ல வேண்டியுள்ளது.