தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள கருங்குளம் கிராமத்தில் ஆயிரத்து 500 குடும்பங்களுக்கும் மேல் வசித்துவருகின்றனர். இந்த ஊரின் மையப்பகுதியில் மிகப்பெரிய குளம் உள்ளது. 33 ஏக்கர் நிலப்பரப்பிலிருந்த இந்தக் குளம் நாளடைவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தற்போது 10 ஏக்கர் அளவில் குறுகிவிட்டது.
தூர்வாரப்படாமல் புல் தரையாகக் காட்சியளிக்கும் குளம் மேலும், நீண்டகாலமாக தூர்வாரப்படாமல் புல் தரையாகக் காட்சி அளிக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகாலமாக இந்தக் குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணியில் பொதுப்பணித் துறையோ அல்லது அரசு பிரதிநிதிகளோ முயற்சிக்கவில்லை என்று இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கருங்குளம் கிராமம், கடல் பகுதியை ஒட்டி உள்ளதால் ஆழ்குழாய்க் கிணறுகளில் வரும் தண்ணீர் உப்புத் தண்ணீராக மாறிவிட்டது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்துவருவதால் கருங்குளம் கிராமத்தை ஒட்டிச் செல்கின்ற நசுவினி ஆற்றில் வரும் மழை தண்ணீர் முழுவதும் வீணாகக் கடலுக்குச் சென்று கலக்கிறது.
எனவே, தண்ணீரை இந்தக் குளத்திற்கு கொண்டுவந்து நிரப்ப வேண்டும் என பலமுறை அலுவலர்களிடத்தில் கோரிக்கை வைத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
இதையும் படிங்க : விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கிற தமிழ்நாடு அரசு! - வாய்க்காலில் கலக்கும் கழிவுநீர்