ராமேஸ்வரம் நடராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் முனியசாமி, ரஞ்சித்குமார், மதன், இலங்கேஸ்வரன், தரக்குடியான், செந்தில், முனீஸ்வரன், காளிதாஸ், உமாகாந்த், காந்திகுமார் ஆவர். இவர்கள் அனைவரும் மீனவர் ஒருவருக்கு புதிய நாட்டுப் படகை வாங்குவதற்காக கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி கடலூருக்குச் சென்றனர். கடலூரில் பைபர் படகை வாங்கிக்கொண்டு செப்டம்பர் 2ஆம் தேதி அதே படகில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, புதுக்கோட்டை மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே படகு வந்து கொண்டிருந்தபோது, திடீரென்று வீசிய அதிவேக புயல் காற்றால் படகு கடலில் மூழ்கியது.
இதனால் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த பத்து மீனவர்களில் இருவரை (செந்தில், காளிதாஸ்) மல்லிப்பட்டின மீனவர்கள் பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து, தத்தளித்துக் கொண்டிருந்த மீதமுள்ள எட்டு மீனவர்கள் குறித்து உறவினர்களிடமும், மீட்புப் படையினரிடமும் தகவல் கூறியுள்ளனர். இதனையடுத்து, மாயமான மீனவர்களின் உறவினர்கள் மற்றும் சக மீனவர்கள் அவர்களை மீட்டுத் தருமாறு ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து, கடலோர பாதுகாப்புப் படை மற்றும் மீன்வளத் துறை அலுவலர்கள் மாயமான மீனவர்களை தேடும் பணியை முடுக்கிவிட்டனர். தேடுதல் பணியில் கடலில் வாட்டர் கேன்களை பிடித்து தத்தளித்துக் கொண்டிருந்த நான்கு மீனவர்களை கடலோர பாதுகாப்புப் படை காப்பாற்றியது. இருப்பினும், மீதமுள்ள நான்கு பேரை கண்டறிய முடியாமல் கடலோர காவல்படையினர் திணறி வந்தனர்.
இதனையடுத்து, கரை ஒதுங்கிய மூன்று மீனவர்களின் சடலத்தை கடலோர பாதுகாப்புப் படையினர் மீட்டனர். அடையாளம் காட்டியபின் மீனவர்களின் சடலத்தை அவர்களது உறவினர்களிடம் உடற்கூராய்வு செய்து ஒப்படைத்தனர். ஆனால், இலங்கேஸ்வரன் என்ற மீனவர் மட்டும் என்ன ஆனார் என்பது தெரியாமல் இருந்தது.
கரை ஒதுங்கிய இலங்கேஸ்வரனின் சடலம் இந்நிலையில், அதிராம்பட்டினம் அருகிலுள்ள மறவக்காடு காட்டுப் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியதாக கடலோர பாதுகாப்புப் படைக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அப்பகுதிக்குச் சென்ற கடலோர காவல் படையினர் தங்களுடன் இலங்கேஸ்வரனின் உறவினர்களையும் அழைத்துச் சென்றனர். அது இலங்கேஸ்வரன் உடல்தான் என்று உறுதிசெய்தபின், அதே இடத்திலேயே உடற்கூராய்வு செய்து உறவினர்களிடம் உடலை ஒப்படைத்தனர். சடலத்தைக் கண்ட மீனவரின் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறினர்.