தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இராஜராஜ சோழனின் 1038வது சதய விழா கோலாகலத் துவக்கம்! - சதய விழா ஏன் கொண்டாடப்படுகிறது

Rajaraja cholan's sathaya vizha: தஞ்சை பெரிய கோயிலை உருவாக்கிய மன்னன் இராசராச சோழனின் 1038வது சதய விழா மங்கள இசை மற்றும் திருமுறை விண்ணப்பத்துடன் துவங்கியது.

Rajaraja cholan's sathaya vizha
தஞ்சையில் இராசராச சோழன் சதய விழா

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 24, 2023, 1:44 PM IST

தஞ்சையில் இராசராச சோழனின் 1038வது சதய விழா கோலாகலத் துவக்கம்

தஞ்சாவூர்:மாமன்னன் இராசராச சோழன் கி.பி 985-இல் சோழப் பெருமன்னனாக அரியணையில் அமர்ந்தார். இவர் பல்வேறு வகைகளில் சிறந்து விளங்கி இராசகேசரி என்ற பட்டத்தைப் பூண்டு, கி.பி 1014 வரை ஆட்சி புரிந்ததாக வரலாறு கூறுகிறது. தமிழகத்தின் பெருமையை உலகறியச் செய்தவர் என பலராலும் பாராட்டப்படுகிறார்.

தில்லையில் செல்லரித்த நிலையில், மூடிக்கிடந்த மூவர் தேவார பாக்களை நம்பியாண்டார் நம்பியின் துணை கொண்டு மீட்டு எல்லா கோயில்களிலும் தேவாரம் ஓதச் செய்ததோடு, சைவ ஆகமங்கள் எனப் போற்றப் பெறும் திருமுறைகளைத் தொகுத்து அளித்த பெருமை இராசராச சோழனை சாரும். இந்நிலையில், ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்த இராசராச சோழன் முடிசூடிய நாள், ஆண்டுதோறும் பெரிய கோயிலில் சதய விழாவாக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதேபோல, இந்த ஆண்டும் 1038ஆம் ஆண்டு சதயவிழா இன்று (அக்.24) கோலாகலமாகத் தொடங்கியது. பத்மநாபன் குழுவினரின் மங்கள இசையுடன் தொடங்கி களிமேடு, அப்பர் பேரவை ஓதுவா மூர்த்திகளின் தேவார, திருமுறை விண்ணப்பத்துடன் விழா தொடங்கியது. பின்னர் மேடை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றது.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், காவல்துறை எஸ்பி ஆஷிஷ் ராவத், அறநிலையத் துறை இணை ஆணையர் ஞானசேகரன், உதவி ஆணையர் கவிதா, துணை மேயர் அஞ்சுகம்பூபதி, சதய விழா குழுத் தலைவர் செல்வம், பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே உள்பட பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தற்போது சதய விழாவினை முன்னிட்டு நாளை (அக்.25) தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையும் விடப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் திருமுறை அரங்கம், கருத்தரங்கம், திருமுறை பண்ணிசை, பரதநாட்டியம், கவியரங்கம், சிவதாண்டவம் ஆகியவையும், மேலும் மாமன்னன் இராஜராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல், திருமுறை திருவீதி உலா, அருள்மிகு பெருவுடையார் அருள்மிகு பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம், பெருந்தீப வழிபாடு, தேவார இன்னிசை, நாட்டியாஞ்சலி, சுவாமி திருவீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இது குறித்து ஓதுவாமூர்த்தி அன்பழகன் என்பவர் கூறும்போது, "இவ்விழாவின் நோக்கம் திருமுறைகள் கண்ட சோழன் என்பதால் திருமுறைகளும், மாமன்னன் ராஜராஜ சோழனின் ஆட்சித் திறமைகளும் மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் இவ்விழா நடைபெறுகிறது. திருமுறை விண்ணப்பம் சிறப்பான முறையில் இந்த கோயிலில் ஓதப்படுகிறது. இவ்விழாவின் மூலம் பள்ளிக் குழந்தைகள் உள்ளிட்ட பாடசாலைகளில் தேவார, திருமுறைகளைக் கொண்டு வர வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: குலசை தசரா திருவிழா; காளி வேடம் அணிந்து பரவசமாக ஆடிய பக்தர்கள்!

ABOUT THE AUTHOR

...view details