தஞ்சாவூர்:உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலை எழுப்பிய மாமன்னன் இராசராச சோழனின் 1038வது சதய விழா பெரிய கோயிலில் அக்.24 மற்றும் 25 ஆகிய இரண்டு நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் முக்கிய நிகழ்வாக, சுவாமி திருவீதி உலா நேற்று இரவு (அக்.25) கோலாகலமாக நடைபெற்றது.
அருள்மிகு பெருவுடையார் பெரியநாயகி, திருவுருவ செப்பு திருமேனிகள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், மாமன்னர் ராசராச சோழன் அவையில் கோயில் தலைமை நிர்வாகியாக இருந்து, பொய்கை நாட்டு கிழவன் சூரியன் ஆதித்தனாகிய தென்னவன், மற்றும் பட்டத்தரசி லோகமாதேவி திருமேனிகளும், காஞ்சி காமகோடி பீடம் சங்கராச்சாரியார் சுவாமிகளால் அளித்த தங்க கிரீடத்துடன் தஞ்சையின் நான்கு ராஜ வீதிகளில் உலா நடைபெற்றது.
முன்னதாக புஷ்ப அலங்காரத்தால் அலங்கரிக்கப்பட்ட சுவாமிகளுக்கு பூஜைகள் செய்து, மகாதீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் மங்கள வாத்தியங்கள் இசைக்க, 50க்கும் மேற்பட்ட இசைக்கருவிகளுடன் சிவகணங்கள் இசைக்க, கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் சுவாமி புறப்பாடு ராஜவீதிகளான மேல வீதி, வடக்கு வீதி, கீழ வீதி, தெற்கு வீதி ஆகிய பகுதிகளில் வீதி உலா நடைபெற்றது.
இதில் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சதய விழா முன்னிட்டு, கடந்த இரண்டு நாட்களும் தஞ்சாவூர் பெரிய கோயில் மற்றும் தஞ்சை மாநகரம் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்டு, விழாக் கோலமாக காணப்பட்டது.