தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலை எழுப்பிய மாமன்னன் இராசராச சோழனின் 1038 வது சதய விழா கொண்டாடப்பட்டது. சதய விழாவினை முன்னிட்டு இராசராச சோழனுக்கு இசை அஞ்சலி செலுத்தும் விதமாக பரதநாட்டிய விழா நடைபெற்றது.
இந்திய அரசு கலாச்சாரத் துறை அமைச்சகத்தின், தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை, அரண்மனை தேவஸ்தானம் இணைந்து நேற்று (அக்.24) சதய விழாவினை முன்னிட்டு அஜ்மா கலைப்பயண வழிகாட்டுதல் சங்கத்தின் மூலம் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருந்த இசைக் கலைஞர்கள், வீணை இசைப்பவர்கள், நாதஸ்வரம் மற்றும் பரதநாட்டிய கலைஞர்கள் 1038 நடன கலைஞர்கள், விளக்கு ஏந்தி பெரியக் கோயில் நந்தி மண்டபம் முன்பு பரதநாட்டியம் ஆடினர்.
கடந்த 2010 ஆம் ஆண்டு தஞ்சை பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு விழாவின் போது ஆயிரம் இசைக் கலைஞர்கள், பெரிய கோயில் வளாகத்தில் பரத நாட்டியம் ஆடியது குறிப்பிடத்தக்கது. தற்போது 13 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரியக் கோயிலில் 1038 நடன கலைஞர்கள் ஒன்றிணைந்து பரத நாட்டியம் ஆடி இசை அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இதுகுறித்து திருநெல்வேலியை சேர்ந்த பரதநாட்டிய கலைஞர் கல்யாணி என்பவர் கூறுகையில், "தஞ்சை பெரிய கோயிலில் பரதநாட்டியம் ஆடுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இக்கோயிலின் மகிமையை இன்னும் உயர்த்தும் வகையில் பரதநாட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொள்வது பெருமை" என தெரிவித்தார்.