தஞ்சாவூர்:தஞ்சாவூரில் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் நினைவு நாள் இன்று (டிச.5) அனுசரிக்கப்பட்டது. இதனையடுத்து ரயிலடி பகுதியில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவச்சிலைகளுக்கு அதிமுகவின் ஓபிஎஸ் ஆதரவாளரும், ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏவுமான வைத்திலிங்கம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது மறைந்த ஜெயலலிதா பற்றி எதுவும் பேசாமல் புகழஞ்சலி கோஷம் கூட எழுப்பாமல், ஒரு நிமிடம் மௌன அஞ்சலி மட்டும் கட்சியினர் செலுத்தினர்.
மேலும் கூட்டத்தில் ப்ளக்ஸ் பேனர் மற்றும் அதிமுக கட்சி கொடியையும், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தவிர்த்து பேரறிஞர் அண்ணா, முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா உருவப்பதாகைகளை மட்டும் கையில் வைத்திருந்தனர். அந்த பதாகையில் அதிமுக என்ற வார்த்தையும் இடம் பெறாமல் கோட்டைப்பகுதி என்று மட்டுமே அச்சிடப்பட்டிருந்தது. பின்னர் செய்தியாளர்கள் பேட்டி கேட்டபோது, வைத்திலிங்கம் எம்எல்ஏ அதையும் மறுத்துவிட்டு சென்றுவிட்டார்.
இதனால், அதிமுக பற்றி வாய் திறக்காமல் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் மெளனம் காத்து வருகிறார். பின்னர், அதிமுக கட்சி சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாளை முன்னிட்டு ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதேபோல, அதிமுக மத்திய மாவட்ட கழகம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் 7ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, ரயிலடி பகுதியில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.