தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே செங்கிப்பட்டியில் உரிய விதிமுறைகளை மீறி செயல்பட்டு வரும் அரசு மணல் விற்பனை நிலையத்தை மூடுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று (ஆகஸ்ட் 25) காலை ஆர்ப்பாட்டம் நடைபெறவிருந்தது.
இதனைத் தடுக்கும் பொருட்டு பூதலூர் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் சிவக்குமார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில் சிபிஐயை ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட கட்சியினரும், அரசு அலுவலர்களும் கலந்துகொண்டனர்.
இந்த அமைதிப் பேச்சுவார்த்தையின்போது ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைகளை விரைவில் நிவர்த்தி செய்வதாக தாசில்தார் உறுதியளித்தார்.
அதில், பூதலூர் வட்டத்திற்குட்பட்ட பொது மக்களுக்கு முன்னுரிமை கொடுத்து மணல் உடனடியாக வழங்கிட உயர் அலுவலர்களுக்கு பரிந்துரை செய்து 15 நாள்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மாட்டுவண்டிக்கு அனுமதி வழங்க 15 நாள்களில் நடவடிக்கை மேற்கொண்டு விண்ணப்பங்கள் உரிய துறைக்கு பரிந்துரை செய்து அனுப்பப்படும்.
மணல் அளவை நேரடியாக ஆய்வு செய்து தரப்படும். முன்னதாகவே, மணல் குவாரிகளில் அனுபவமுள்ள ஏழு பேர் பணியில் உள்ளனர். மேலும், தகுதி உள்ள மூன்று உள்ளூர் நபர்களுக்கு பணியளிப்பது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.