அழிவின் விழிம்பில் நிற்கும் பொம்மலாட்டக் கலை.. தஞ்சாவூர்:தமிழர்களின் மரபுவழிக் கலைகளில் மிகவும் சிறப்பு வாய்ந்த கலை பொம்மலாட்டம். இந்த கலையானது மன்னர்கள் காலத்திலிருந்து வந்த கலையாகும். அந்தப்புரத்தில் உள்ள ராணியை மகிழ்விக்கும் வகையில், மனிதர்கள் முகம் காட்டாமல் பொம்மைகளை வைத்துப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்தி, ராணியை மகிழ்விக்க நடத்தப்பட்ட கலையாக இந்த பொம்மலாட்டக் கலை கூறப்படுகிறது.
பின்னர் நாளடைவில், நாகரீக வளர்ச்சிக்கு ஏற்ப கிராமங்களில் கூத்து, நாடகம், சினிமா என வளர்ச்சி அடைந்துள்ளது. பொம்மலாட்டக் கலையில் மரப்பாவை கூத்து, கைப்பாவை மற்றும் தோல்பாவை கூத்து என நடத்தப்படுகிறது. மரப்பாவை கூத்து மரத்தினால் செய்யப்பட்ட பொம்மைகளைக் கொண்டு நடத்தப்படுகிறது.
அதைப்போல் தோல்பாவை கூத்து விலங்குகளின் தோல் மூலம் செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு நடத்தப்படுகிறது. இத்தகைய பாரம்பரியம் நிறைந்த பொம்மலாட்டக் கலை குறித்து திருக்குறளில் 1058வது குறளில்
"இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று" என மரப்பாவை பற்றிக் கூறப்பட்டுள்ளது.
சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மன்னர்கள் காலத்தில் நடத்தப்பட்ட இந்த பொம்மலாட்டக் கலை, இன்றும் ஒரு சில இடங்களில் தொடர்ந்து பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது. அதைப்போல் பாரம்பரியம் மிகுந்த இக்கலையைக் கடந்த 3 தலைமுறைகளாக மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் (63) என்பவர் தனது குழுவினருடன் தமிழகத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் மற்றும் பள்ளி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் நடத்தி வருகிறார்.
மேலும், இவர் பொம்மலாட்டக் கலைக்காகத் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார். இந்த பொம்மலாட்டக் கலையை நடத்தப் பாடகர், பொம்மையை இயக்குபவர், இசைக் கலைஞர் என சுமார் 7 முதல் 12 பேர் வரை இக்கலையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பொம்மலாட்டக் கலையில் புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள், சமூக விழிப்புணர்வு கதைகள், விளம்பர கதைகள் மற்றும் சுகாதாரம், நீர் சேமிப்பு, வனம் பாதுகாப்பு உள்ளிட்ட விழிப்புணர்வு கதைகளையும் எடுத்துக் கூறி, பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வையும் இக்குழுவினர் ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதுகுறித்து பொம்மலாட்டக் கலைஞர் சோமசுந்தரம் கூறுகையில், “பழங்கால கிராமிய கலையான பொம்மலாட்டக் கலையை, 3 தலைமுறையாக நடத்தி வருகிறோம். நாங்கள் மரப்பாவையை வைத்து பொம்மலாட்டக் கலையை நடத்துகிறோம்.
தற்போது இக்கலை மிகவும் நலிவடைந்து வருகிறது. இருப்பினும் இக்கலையை அழிய விடாமல் பாதுகாக்கத் தொடர்ந்து நடத்தி வருகிறோம்” எனக் கூறினார். இந்த பொம்மலாட்டத்தில், பெண் பொம்மையை இயக்க புரி எனப்படும் வளையத்தைத் தலையில் கட்டிக் கொண்டு கைகளால் இரும்புக் கம்பி கொண்டு இயக்குகின்றனர். மேலும், மற்ற பொம்மைகளுக்கு மர குச்சி கொண்டு இயக்குகின்றனர்.
பாரம்பரியத்தின் சாயலை அப்படியே மாறாமல் வைத்திருக்கும் இந்த கலையை, மக்கள் இன்றளவும் ரசித்துப் பார்ப்பதே இக்கலையின் வெற்றி. எனவே இக்கலையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் வகையில், அரசு இசைப்பள்ளி மற்றும் இசைக் கல்லூரிகளில் பாடமாகச் சேர்த்து மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும் என்பதே பொம்மலாட்டக் கலைஞர்களின் கோரிக்கையாக உள்ளது.
மேலும், அரசின் அறநிலையத்துறை திருவிழாக்களில் பொம்மலாட்டக் கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கினால் கலையை அழியாமல் பாதுகாக்க முடியும் என்றும் பொம்மலாட்டக் கலைஞர் சோமசுந்தரம் நம்பிக்கையுடன் கூறுகிறார்.
இதையும் படிங்க:ரூ.4,000 கோடி என்ன ஆனது? தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!