தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், தஞ்சாவூரில் கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்து 764ஆக உயரந்துள்ளது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ், கரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் அனைவரும் பல்ஸ் ஆக்சிமீட்டர் மற்றும் தெர்மல் ஸ்கேனர் கருவியை வைத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், '' கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்படுபவர்களுக்கு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, வல்லம் கரோனா சிகிச்சை மையம், கும்பகோணம் அன்னை பொறியியல் கல்லூரி கரோனா சிகிச்சை மையம், பட்டுக்கோட்டை குடிசை மாற்று வாரிய கரோனா சிகிச்சை மையம் ஆகிய இடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கரோனா நோய்த் தொற்று அறிகுறி உறுதி செய்யப்படுபவர்கள், அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி தங்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு, வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் பல்ஸ் ஆக்சிமீட்டர் எனப்படும் பிராணவாயு அளவு கண்டறியும் கருவி மற்றும் தெர்மல் ஸ்கேனர் எனப்படும் உடற்வெப்ப அளவு கண்டறியும் கருவி ஆகியவற்றை கட்டாயம் தங்களுடன் வைத்திருக்க வேண்டும்.